சக்திவேல் என்பவர் இயக்கத்தில் விதார்த், லட்சுமிபிரியா, சந்திரமவுலி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ’பயணிகள் கவனிக்கவும்’. ஏப்ரல் 29ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் தனது முகநூல் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அவர் அதில் கூறி இருப்பதாவது, “’பயணிகள் கவனிக்கவும்’ என்பது எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய ஒரு மிகச்சிறந்த புத்தகம். It is easily one of his best. Airport கதைக்களம். விருது வாங்கிய புத்தகம். அப்பாவின் உழைப்பு, ஒவ்வொரு நாளும் விமான நிலையம் சென்று அங்குள்ளவர்களிடம் பேசி பழகி உருவாக்கிய படைப்பு. இதைப் படமாக்க வேண்டும்மென்பது எனது கனவு.
முன்பு இட்ட ஒரு பதிவில் குறிப்பிட்டது போல, அப்பா பாலகுமாரன் எழுதிய அனைத்து படைப்புகளின் சம்பந்தமான காப்பிரைட்ஸ் , சட்டப்படி என்னுடைய பொறுப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளேன். அது நாளிதழிலும் செய்தியாக வந்தது. என்னுடைய சுய நினைவவுக்கு தெரிந்து இந்த டைட்டிலை எங்கள் படத்திற்கு வைத்து கொள்ளலாமா என்று என்னிடமோ எங்கள் குடும்பத்தாரிடமோ யாரும் கேட்கவில்லை. ஒரு கர்டஸி கால்? ஒரு கடிதம்? சிரித்த முகத்துடன் ஒரு விண்ணப்பம்? எதுவும் இல்லை. மிகவும் நெருக்கமான பலர் இதில் இருந்தாலும் என்னிடம் இதைப்பற்றி பேசவில்லை.
சப்பகட்டு கட்டாத,….அதெல்லாம் செல்ஃபே எடுக்காது...பயனிகள் கவனிக்கவும் என்பது ஒரு பொதுச்சொல் என்று மல்லுகட்டினால், இந்தப் பொய் எத்தனை பெரியது என்று சொல்பவர்களுக்கே தெரியும். சற்று நாட்கள் முன்னால் வெளிவந்த "சில நே*** சில ம*****" படத்திற்கும் அனுமதியில்லாமல் படத்தலைப்பு எடுத்துக்கொள்ளப்பட்டது என்று ஒரு செய்தி கேள்விப்பட்டேன்.
பின் நடிகர் ஒருவர் எழுத்தாளாரின் குடும்பத்தாரிடம் கேட்டுக்கொண்டதால் அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் கேள்விப்பட்டேன். சில நே**** சில ம**** பொதுச்சொல்லா? நாளை ’வேள்பாரி’ என்ற தலைப்பை யாருக்கும் தெரியாமல் கவுன்ஸிலில் பதிவு செய்துவிட்டு, என்ன படம் வேண்டுமானாலும் எடுக்கலாமா? மனசாட்சி தடை சொல்லாதா? சுட்டெரிக்காதா? (எழுத்தாளர்கள் கவனிக்கவும்).
எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய ’பயணிகள் கவனிக்கவும்’ மிகவும் பிரபலமான ஒரு படைப்பு, 1993 ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து அன்று முதல் இன்று வரை பத்து பதிப்புகளுக்கு மேல் வந்த ஒரு சக்சஸ்ஃபுல் புத்தகம். இதை நானும் எனது நண்பர்களும் சீன் வாரியாக பிரித்து, வரி வரியாக வசனங்களக மார்க் செய்து, கதாபாத்திரங்களாகப் பிரித்து அவர்களுக்கு வடிவம் கொடுத்து வைத்துள்ளோம்.
என்றோ ஒரு நாள் உயிர் வரும் என்ற கனவுடன். பாலாவின் “ பயணிகள் கவனிக்கவும்” என்னுடன் சேர்ந்து என் கனவுகளுடன் சேர்ந்து நிச்சயமாக வளரும், ஒரு நாள் வெளிவரும். ஆனால் அந்த கனவுப்படைப்புக்கு, அந்த திரைப்படத்திற்கு இப்பொழுது என்ன பெயர் வைப்பது? யார் கேட்பினும் பதில் கிட்டுமா?
கீழே இருக்கும் படத்திற்கும் என் அப்பா பாலகுமாரன் எழுதிய புத்தகத்திற்கும் எந்த வித தொடர்பும் இருக்காது என்று நம்புகிறேன். மலையாள படத்தின் ரீமேக் என்று தெரியவந்தது. இருப்பினும் இந்த டைட்டிலை உங்களின் படத்திற்கு வைப்பதற்கு என்ன காரணம்? விளக்கம் கிடைக்குமா? பெரிய நடிகர் பேசுவாரா? யார் பேசினாலும் சட்ட ரீதியாக அணுகலாம் என்று நாங்கள் முடிவெடுத்துள்ளோம்” என்று தெரிவித்திருந்தார். அதேபோல் தயாரிப்பு தரப்பிற்கு சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: பெரிய நடிகர்கள் சினிமாவை வாழ வைக்கமாட்டார்கள் - கே. ராஜன் பேச்சு!