சென்னை: 'திரையரங்குகளில் உணவு ஸ்டால்கள் இல்லையென்றால் எங்களால் திரையரங்கை நடத்த முடியாது', என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், திரையரங்கிற்கான சொத்து வரியினைக் குறைக்குமாறும் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சிறப்புக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த அவசரக்கூட்டத்தில் 10 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச்சந்தித்த சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம், தற்போது உள்ள சூழ்நிலையில் உயர்த்தப்பட்ட சொத்துவரியினை ஒரு குறிப்பிட்டுள்ள அளவு திரையரங்குக்கு குறைத்து தர அரசை கேட்டுக்கொள்கிறோம்.
கருணாநிதி காலத்தில் திரையரங்குகளுக்கு தனி அட்டவணையின்கீழ் மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை போல நிர்ணயித்து வழங்கும் படியும், புதிய ஆப்ரேட்டர்களை தேர்வு செய்ய ஒரு சட்டம் இயற்றி நிறைய ஆப்ரேட்டர்களை தேர்வு செய்து வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும்படியும் அரசை கேட்டுக்கொள்கிறோம்.
பெரிய திரையரங்குகளை 2 அல்லது அதற்கு மேற்பட்ட திரையரங்குகளாக மாற்றிக்கொள்ள PWD மூலம் அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் சிறு முதலீட்டு படங்கள் வெளிவர மிக வசதியாக இருக்கும். தியேட்டர்களில் பராமரிப்பு கட்டணம் என்பதை A/C தியேட்டருக்கு 10 ரூபாய், Non A/C தியேட்டருக்கு 5 ரூபாய் என உயர்த்தி தரும்படியும், மற்ற மாநிலங்களில் உள்ளது போல் டிக்கெட் கட்டணத்தை திரையரங்க உரிமையாளரே நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்கும் படியும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
அத்துடன் திரைப்படம் வெளியாகி தியேட்டர்களில் வந்து 8 வார காலத்திற்குப் பின் தான் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் எனவும், திரைப்படம் வெளியாகி 3 நாட்களுக்கு பிறகு தான் படம் குறித்து விமர்சனம் செய்ய வேண்டும். பெரிய திரையரங்குகளை சிறியதாக மாற்றினால் சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும்.
தற்போது ’சீதாராமம்’ திரைப்படம் நன்றாக ஓட இதுவும் ஒரு காரணம். ஓடிடியில் வெளியிட்டால் திரையரங்குகளில் வசூல் குறையும்” எனத் தெரிவித்தார். மேலும், திரையரங்குகளில் டிக்கெட் விலையை விட ஸ்நாக்ஸ் விலை அதிகமாக இருப்பது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, ”தியேட்டர்களின் தரத்திற்கு ஏற்ப தான் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
திரையரங்குகளை நடத்த வேண்டும் என்றால் தற்போதைய காலகட்டத்தில் ஸ்டால்கள் தான் அவசியமாகிறது. ஸ்டால்கள் மூலம் தான் தியேட்டர்களை நடத்த முடிகிறது. பெரும்பாலான தியேட்டர்களில் 60 ரூபாய்க்கு கூட பாப்கார்ன் கொடுக்கிறோம் என்றும் , இல்லாவிட்டால் தியேட்டர்களை மூட தான் வேண்டும்.
’விக்ரம்’ திரைப்படத்திற்கு பிறகு ’யானை’, ’திருச்சிற்றம்பலம்’, ’சீதா ராமம்’ உள்ளிட்ட படங்கள் தியேட்டர்களில் வெற்றி பெற்றுள்ளன. எதிர்மறையான விமர்சனங்களை குறைத்தால் தயாரிப்பாளர்கள் உட்பட பலரும் நன்றாக இருப்பார்கள். கரோனா தொற்று பாதிப்பால் திரையரங்குகள் ரொம்ப நஷ்டத்தில் இருந்தது. தற்போது கொஞ்சம் மீண்டு வந்துள்ளது” எனவும் தெரிவித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: நடிகர் போண்டாமணிக்கு தீவிர சிகிச்சை - கண்ணீர் மல்க உதவி கேட்கும் நடிகர் பெஞ்சமின்