சென்னை: நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ஆக்ஷன், கமர்ஷியல், ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' தீபாவளியை முன்னிட்டு இம்மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குநர் கார்த்தி இயக்கியுள்ள இப்படத்திற்கு, இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். இப்படத்தை எம் ஸ்டுடியோஸ், ஓப்பன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
இப்படம் குறித்து நடிகர் விக்ரம் பிரபு கூறியதாவது, "இயக்குநர் கார்த்தி படத்தின் கதையைச் சொன்னபோது அதில் ஆக்ஷன், எமோஷன், காதல், நடனம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை இருப்பதை உணர்ந்தேன். மேலும், நான் கமர்ஷியல் படம் நடிப்பது குறித்து எப்போதும் அதிகம் யோசிப்பேன். இப்போது இந்தப் படத்தில் இயக்குநர் கார்த்தி என்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக காட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.
பின்னர் 'ரெய்டு' படத்தின் இயக்குநர் கார்த்தி கூறும் போது, "சமூக பிரச்சனையுடன் கூடிய ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக இந்த படம் இருக்கும். நான் படத்தின் திரைக்கதையை எழுதும்போது, கதாநாயகனின் கதாபாத்திரம் பக்கத்து வீட்டுப் பையன் போலவும், அதே சமயம் மாஸ் ஹீரோவாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கேற்ப விக்ரம் பிரபு இருந்தார்.
மேலும், இந்தப் படத்திற்கு அவர்தான் சரியானவர் என்று ஒட்டுமொத்த டீமும் கருதியது. இந்த படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு முழு உழைப்பை விக்ரம் பிரபு கொடுத்துள்ளார். இயக்குநர் முத்தையாவின் வசனங்கள் இந்தப் படத்தை வணிக ரீதியாக எடுத்துச் செல்வதற்குப் பெரும்பலமாக அமைந்து, வெற்றியை ஈட்டித் தர இருக்கிறது" என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை ஸ்ரீ திவ்யா, "நடிகையாக தனக்கு சிறந்த அடையாளத்தைக் கொடுத்த தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுப்பதில் மகிழ்ச்சி. 'ரெய்டு' திரைப்படம் எனக்கு நடிப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பை அளித்துள்ளது. அதில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் ஏற்கனவே விக்ரம் பிரபுவுடன் நடித்த படத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படம் இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜி.மணிகண்ணன் பேசும் போது, "படத்தின் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் பிரபுவின் முந்தைய படங்களான 'டாணாகாரன்' மற்றும் 'இறுகப்பற்று' போன்ற படங்களின் வெற்றி அவரை குடும்ப பார்வையாளர்களுக்குப் பிடித்தமானவராக மாற்றி இருக்கிறது. இயக்குநர் கார்த்தி ஸ்கிரிப்டாக சொன்னதை அப்படியே திரையில் கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" எனக் கூறினர்.