சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் "லியோ" (leo). மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. செவன் (7) ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் த்ரிஷா, மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான முன்னனி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் லியோ படத்தில் மெயின் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கேஜிஎப் இரண்டாம் பாகத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய திரைப்பட ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் லியோ படத்தில் அவர் இணைந்திருப்பது விஜய் ரசிகர்களுக்கும் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் இணையுமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அப்படி இணைந்தால் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் மிகப் பெரிய படமாக லியோ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. காஷ்மீரில் கடும் குளிரிலும் கூட படப்பிடிப்பு இடைவிடாது நடைபெற்று வந்தது.
விஜய் முதற்கொண்டு அனைவரும் கடும் சிரமங்களுக்கு இடையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். அதன்பின் மிஷ்கின் படத்தின் தனது பகுதியை நிறைவு செய்து விட்டு கடந்த மாதம் சென்னை திரும்பினார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் லியோ படப்பிடிப்பில் இணைந்த வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டு வைரலானது. தற்போது அவரும் தனது பகுதியை நடித்து முடித்து விட்டார்.
இந்நிலையில் தற்போது லியோ படத்தின் மிக நீண்ட காஷ்மீர் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் இன்று சென்னை திரும்ப உள்ளனர். இதனை தொடர்ந்து லியோ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி விட்டு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்காக ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு மாதங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி அக்டோபர் 19 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, அதன் தாக்கம் லியோ படக்குழுவினர் தங்கியிருந்த ஹோட்டலிலும் எதிரொலித்தது. ஆனால் படக்குழுவினர் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு லியோ படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளனர்.
இதையும் படிங்க: 39 ஆண்டுகளுக்கு பின் இணைந்த வைரமுத்து - சித்ரா கூட்டணி!