சென்னை: தமிழ் சினிமாவில் தனித்துவ நடிகராக வலம் வருபவர், விஜய் சேதுபதி. துணை கதாபாத்திரங்களில் நடித்து, பின்னர் நாயகனாகி தற்போது இந்தி சினிமா வரை சென்றுள்ளார். இவரது மகன் சூர்யா, சிறுவயதில் விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடி தான், சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், பிரபல சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்குநராக அறிமுகமாகும் படத்தில், சூர்யாவும் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு பீனிக்ஸ் (வீழான்) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை இன்று (நவ.24) சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது.
இந்த விழாவில் சண்டைப் பயிற்சியாளர் மற்றும் இப்படத்தின் இயக்குநர் அனல் அரசு, சூர்யா விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்தில் அபி நக்ஷத்திரா, வர்ஷா, முத்துக்குமார், ஹரிஷ் உத்தமன், காக்கா முட்டை விக்னேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சிஎஸ் இசை அமைக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் அனல் அரசு, “இது ஒரு விளையாட்டு தொடர்பான அதிரடி திரைப்படம். இதற்கான நாயகனை தேடிக் கொண்டு இருக்கும்போது, ஒருநாள் ஜவான் படப்பிடிப்பில் சூர்யாவைப் பார்த்தேன். இவர் இந்த கதாபாத்திரத்துக்கு சரியாக இருப்பார் என்று நினைத்து விஜய் சேதுபதியிடம் கேட்டேன்.
விஜய் சேதுபதியும் மகிழ்ச்சியாக சரி என்று சொல்லிவிட்டார். சூர்யா ஏற்கனவே பாக்ஸிங் பயிற்சி செய்து வருகிறார். மேலும், இப்படத்திற்காக பல மாதங்கள் பயிற்சி எடுத்துள்ளார்” என்றார். மேலும், விஜய் சேதுபதி மலேசியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் இங்கு வர முடியவில்லை என்றும், போனில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார் எனவும் கூறினார்.
பின்னர், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பேசுகையில், “எனக்கு முதலில் இருந்தே நல்லா சண்டை செய்ய வேண்டும் என்ற ஆசை. மாஸ்டர் படத்தில் அறிமுகமாகி, நல்லா சண்டை செய்வது சந்தோஷமாக உள்ளது. அப்பாவின் பெயரில் நான் வரக்கூடாது என்று நினைத்தேன். அப்பா வேற, நான் வேற. அதனால்தான் அறிமுகம் சூர்யா என்று போட்டுள்ளனர். சூர்யா விஜய் சேதுபதி என்று போடவில்லையே.
அப்பா, அம்மா சந்தோஷப்பட்டனர். நான் அவரிடம் எதுவும் கேட்டுக் கொள்ள மாட்டேன். போன் செய்து பயமாக இருக்கு அப்பா என்றேன், பாத்துக்கலாம்டா என்றார், அவ்வளவு தான்” எனக் கூறினார். அடுத்த படம் அப்பாவுடன் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு அது போகப் போக பாத்துக்கலாம், இன்னும் காலேஜ் முடிக்கணும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சினிமா ரசிகர்களே இந்த வாரம் ரிலீஸான படங்கள் என்னென்ன தெரியுமா?