தமிழ்த் திரையுலகில் துணை நடிகராக உருவாகி, கதாநாயகனாக அவதாரம் எடுத்து திரையுலகில் மிக முக்கிய நடிகர்களுக்கு வில்லனாக உருமாறி இருப்பவர், நடிகர் விஜய் சேதுபதி. வெகுநாட்களாக விஜய் சேதுபதியின் ரசிகர்கள் காத்திருந்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைஃப் நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
![Merry Christmas Movie](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17-07-2023/19022029_f.jpeg)
டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ் (Matchbox pictures) இணைந்து தயாரித்து வழங்கவுள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. ஜானி கதார், பத்லாபூர் மற்றும் அந்தாதுன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இது இவருடைய முதல் தமிழ்ப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல கத்ரினா கைஃப் முதல்முறையாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
![Merry Christmas Movie](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17-07-2023/19022029_gh.jpeg)
ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் இருந்து இந்த படம் சற்று வேறுபட்டு, வித்தியாசமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ‘மெரி கிறிஸ்துமஸ்’ இரண்டு மொழிகளில் வெவ்வேறு துணை நடிகர்களுடன் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெய் பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
அதே நேரத்தில் அதே வேடங்களில் இந்தி பதிப்பில் சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன், டின்னு ஆனந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இது நிச்சயமாக உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தில் பரி என்ற குழந்தை நடிகரும் அறிமுகமாகிறார். அஸ்வினி கல்சேகர் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். ரமேஷ் தோராணி, ஜயா தோராணி மற்றும் சஞ்சய் ரவ்த்ரே, கேவல் கர்க் ஆகியோர் டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் மெரி கிறிஸ்துமஸ் படத்தை தயாரித்து உள்ளனர்.
![Merry Christmas Movie](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17-07-2023/19022029_thu.jpg)
இந்தப் படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாகவும், பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் வகையிலும் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். மெரி கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: Keerthy suresh: கண்ணிவெடியில் கால்பதிக்கும் கீர்த்தி சுரேஷ் - லேட்டஸ்ட் கிளிக்ஸ்!