சென்னை: விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன்-2 திரைப்படம் வரும் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. அது தொடர்பாக Pre Release Event சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, மன்சூர் அலிகான், பாரதிராஜா, பாக்யராஜ், இயக்குநர் சசி, மோகன் ராஜா உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர். விழாவின் இடையில் அயோத்தி பட இயக்குநர் மந்திரமூர்த்தி, டாடா பட இயக்குநர் கணேஷ் கே.பாபு, யாத்திசை பட இயக்குநர் தரணி ராசேந்திரன் ஆகியோர் பிச்சைக்காரன்-2 படக்குழுவால் விழா மேடையில் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் பேசிய விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா, “இறைவனுக்கு நன்றி. உங்களைப் போல நிறைய உள்ளங்கள் எங்களுக்காக உள்ளீர்கள். மாட்டு பொங்கல் அன்று மலேசியாவில் இருந்து விஜய் ஆண்டனி உதவியாளர் என்னைத் தொடர்பு கொண்டார். சாருக்கு விபத்து ஏற்பட்டது. தண்ணீரில் மூழ்கிவிட்டார் எனத் தொலைபேசியை கட் செய்துவிட்டார்.
என்ன நினைப்பது என்றே தெரியவில்லை. இங்குள்ள பத்திரிகையாளர்கள் பலர் எனக்கு பாசிடிவ்வாக சொன்னார்கள். இப்போது இங்கு அவர் உள்ளார், கடவுளின் செயல் மற்றும் உங்களின் ஆசிர்வாதம் தான். அவர் கடவுள் சார்ந்து இருப்பதில்லை. ஆனால் எல்லா நல்ல விஷயங்களையும் செய்வார். அவருக்கு பின்னால் இருப்பது மகிழ்ச்சி. அவரை திருமணம் செய்தது மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
இயக்குநர் சசி, “இந்த கதையை இவரிடம் சொல்வதற்கு முன் 4, 5 பேரிடம் கூறினேன். எல்லோரும் பிச்சைக்காரனின் கதையாகப் பார்த்தார்கள். ஆனால், விஜய் ஆண்டனி தான் பணக்காரனின் கதையாகப் பார்த்தார். விஜய் ஆண்டனி இசையமைப்பதற்காக ஒரு கேள்வி கேட்டு, இந்த கதையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்தார். நூறு சாமிகள் என்ற பாடல் அனைவரிடமும் சென்று இருக்கிறது என்றால் அது விஜய் ஆண்டனியின் contribution தான்” எனத் தெரிவித்தார்.
அதன்பின் பிச்சைக்காரன்-2 படத்தின் இயக்குநர் விஜய் ஆண்டனியை மேடைக்கு வர அழைப்பு விடுத்தார், இயக்குநர் சசி. அப்போது விஜய் ஆண்டனி, “பிச்சைக்காரன் படம் நீங்கள் (சசி) போட்ட பிச்சை. இந்தப் படம் இயக்க எனக்கு விருப்பம் இல்லை. இதை நீங்கள் தான் பண்ண வேண்டும் என நினைத்தேன். கதை எழுதி விட்டேன். 10 நாள்கள் முதலில் சரியாக வரவில்லை. இயக்கத்தை இந்த படத்தில் கற்றுக்கொண்டேன். பிச்சைக்காரனில் சசி என்ன செய்தாரோ அதே எமோஷனலை காப்பி செய்து வைத்தது தான் பிச்சைக்காரன்-2” எனப் பேசினார்.
இதைத் தொடர்ந்து பேசிய பாரதிராஜா , “60 வருடத்துக்கு மேலாக இந்த திரைப்பயணத்தை கடந்து விட்டோம். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார் தானே... எதுக்கு படம் இயக்குகிறார் என நினைப்பேன். பிச்சைக்காரன் படத்தைப் பார்த்தேன் அருமை. கமர்ஷியலாக இதன் எல்லை எங்கே போகும் என்றே தெரியாது, சூப்பர்.
எனக்கு பாக்யராஜ் இல்லை என்றால் நிறைய விஷயங்கள் இல்லாமல் போயிருக்கும். அதனால் எழுத்தாளர் மிக முக்கியம். பாக்யராஜ் ஒரு சிறந்த எழுத்தாளர். விஜய் ஆண்டனி நல்ல இசையமைப்பாளர். எனக்கு இது 2-ம் வாழ்க்கை. போன மாதம் முன்புதான் பிழைத்து வந்தேன். பெயரிலேயே விஜய், வி - வெற்றி, ஜெய் - வெற்றி. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் பாரதிராஜாவும் வருவேன், பாக்யராஜும் வருவார்” என்றார்.
இதையும் படிங்க: "வாய்ப்பு கிடைத்தால் ரஜினிக்கு வில்லியாக நடிப்பேன்” - வரலட்சுமி சரத்குமார்!