சென்னை: வடபழனியில் உள்ள ஸ்டண்ட் யூனியன் அலுவலகத்தில் தென்னிந்திய திரைப்பட டிவி ஸ்டண்ட் யூனியன் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தவசி ராஜ் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து அப்போது பேசிய தவசி ராஜ், "நான் கடந்த முறை சிறப்பாக செயல்பட்டதால் இந்தமுறையும் என்னை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இதுவரை இல்லாத வகையில் நவீன முறைப்படி நாங்கள் ஸ்டண்ட் காட்சிகளில் செயல்களில் ஈடுபடுகிறோம்.
இனிமேல் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருக்க ஏற்பாடு செய்ய முதலமைச்சருக்கும், பெப்சிக்கும் கோரிக்கை வைத்திருக்கிறோம்.சில நாட்களுக்கு முன் விடுதலை திரைப்படத்தில் உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் சுரேஷ் அவர்களுக்கு விடுதலை படக்குழு சார்பில் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர், நடிகர் சூரி ஆகிய மூவரும் இணைந்து ரூ.25 லட்சம் அவர் குடும்பத்தினருக்கு நிதி அளிப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.அதேபோல் இயக்குநர் ஹெச்.வினோத்தும் உதவி செய்வதாக தெரிவித்திருக்கிறார்.
நாங்கள் பிரிவினை இல்லாமல் ஒரு குடும்பம் போல செயல்பட்டு வருகிறோம். நவீன காலங்கள் வந்தாலும் சில காட்சிகளை நாங்களாக தான் நடிக்க வேண்டியதாக இருக்கும். எனவே விபத்துகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. இருந்தபோதும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்" இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க:இன்று வெளியாகிறது அஜித்தின் ’துணிவு’ பட ட்ரைலர்