நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், K4 Kreations சார்பில் கேசவன் தயாரிப்பில், சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் படம் “வேழம்”. ஜுன் 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள நேற்று(ஜூன் 20) நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகை ஜனனி பேசுகையில், ”பொதுவாக புதுமுகங்களுடன் இணைந்து பணியாற்றும்போது சில அசௌகர்யம், சந்தேகம் இருக்கும். ஆனால், இயக்குநர் சந்தீப் ஷ்யாம் அதில் விதிவிலக்காக மிக அற்புதமான உழைப்பாளியாக இருந்தார்.
அசோக்கும் நானும் ’தெகிடி’யில் இணைந்து பணியாற்றியுள்ளோம். இப்போது மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளோம். இந்தப்படத்தின் சில காட்சிகளை நான் பார்த்திருக்கிறேன். அது நன்றாக வந்திருக்கிறது. பொதுவாக இரண்டு நடிகைகள் ஒரு திரைப்படத்தில் இணைந்து பணிபுரியும்போது நடிகைகளுக்குள் சில சச்சரவுகள் இருக்கும் என்று ஒரு தவறான கருத்து உள்ளது.
ஆனால், அது உண்மையல்ல. நானும் ஐஸ்வர்யாவும் மிக நல்ல நண்பர்களாகப் பழகினோம். ஜானுவின் இசையமைப்பு இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். அவரிடமிருந்து எனக்கு ஒரு நல்ல பாடல் கிடைத்ததில் மகிழ்ச்சி. படத்தை சிறந்த முறையில் தயாரித்ததற்காக தயாரிப்பாளர் கேசவன் சாருக்கு நன்றி. வேழம் ஜூன் 24 அன்று வெளியாகிறது. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்” எனப் பேசினார்.
இயக்குனர் சந்தீப் ஷ்யாம் பேசுகையில், ”எனக்கு டைரக்சன் மீதுள்ள ஆர்வத்தை புரிந்து உணர்ந்து கொண்ட, தயாரிப்பாளரைப் பெற்றது, எனக்கு அதிர்ஷ்டம். அவருக்காக சில விளம்பரப் படங்கள் செய்துள்ளேன். அவர் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தப் படம் பெரிய அளவில் வெளியாவதற்கு SP Cinemas மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. அசோக் இப்படத்தில் பல தோற்றங்களில் தோன்றுவதால் அதற்காக உயிரைக் கொடுத்து உழைத்துள்ளார். ஜனனி இந்தப் படத்தில் ஒரு சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்.
ஐஸ்வர்யா ஒரு நல்ல நடிகை. அவரது நடிப்பு இந்தப் படத்தில் அபாரமாக இருக்கும். இசையமைப்பாளர் ஜானு என் வகுப்பு தோழர், நாங்கள் இணைந்து இப்படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எடிட்டர் சிறப்பாக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவு இப்படத்திற்கு மிகப்பெரிய தூணாக அமைந்துள்ளது. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தை நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: தமிழ் பேசும் மலையாள ஜல்லிக்கட்டு!