சென்னை: சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையப்படுத்தி கூச முனுசாமி வீரப்பன் (Koose Munisamy Veerappan) என்ற ஆவண இணையத் தொடர் ஜீ5 ஒடிடி தளத்தில் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது. 6 எபிசோடுகளாக உருவாகியுள்ள இந்த இணையத் தொடரை, நக்கீரன் கோபாலின் மகள் பத்மாவதி தயாரித்துள்ளார்.
இந்தத் தொடரில், வீரப்பனின் ஆரம்ப காலகட்டம் முதல் அவரின் செயல்பாடுகள், அவர் செய்த கொலைகள் மற்றும் அவரைச் சுற்றி நடக்கும் அரசியல் என பல்வேறு கோணங்களில் படமாக்கி உள்ளனர். ஆவணப்படமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த இணைய தொடரில், பல ஆண்டுகளுக்கு முன்பு நக்கீரன் பத்திரிகையால் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் வீரப்பனின் பேட்டிகள் இடம் பெற்றுள்ளது.
அதில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்த எம்.ஜி.ஆராக இருப்பார். அவர் தனி கட்சி தொடங்கி, தனித்துப் போட்டியிட வேண்டும். யாருக்கும் குடையாக இருக்கக் கூடாது என்று வீரப்பன் பேசிய பேட்டி காட்சியாக இடம் பெற்றுள்ளது. அதேபோல் கருணாநிதி, ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்று அவர் கூறியதும் இடம் பெற்று இருக்கிறது. அதேநேரம் ஜெயலலிதாவுக்கு எதிராக வீரப்பன் பேசிய காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
இந்த இணையத் தொடரின் திரையிடல் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நக்கீரன் கோபால், “இந்த ஆவணப்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க திட்டமிட்டு இருக்கிறோம். மேலும், இந்த ஆவணப்படம் மூலம் சதாசிவ அறிக்கை வெளியே வந்து, இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் என நம்புகிறேன்.
இணையத் தொடரில் வீரப்பன் பேசும்போது, கேரள மக்கள் சிலர் தன்னிடம் எப்படி தமிழ்நாடு மக்கள் நடிகர்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்று கேட்டதாக பேட்டி அளித்திருந்தார். மற்றொரு இடத்தில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும், ரஜினிகாந்த் நல்ல மனிதர் என வீரப்பன் கூறினார்.
அதை தாண்டி வேறு எதையும் கேட்கவில்லை காரணம், எங்களைச் சுற்றி நிறைய துப்பாக்கிகள் இருந்த சூழலில் அந்த இடத்திலிருந்து நான் கேள்வி எழுப்பினேன், எனக்கு சின்ன பயமும் இருந்தது. அதனால் அது பற்றி கேள்வி எழுப்பவில்லை என கூறினார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என வீரப்பன் கூறியதை, இதுவரை நடிகர் ரஜினிகாந்திடம் தான் கூறவில்லை” எனவும் நக்கீரன் கோபால் தெரிவித்தார்.
வீரப்பனின் நிஜ வீடியோக்களோடு வெளியாகி உள்ள இந்த தொடர் போல, நக்கீரனிடம் உள்ள நித்தியானந்தா படங்களும் வெளியாகுமா என்ற கேள்விக்கு எங்களின் தீரன் தயாரிப்பு மூலம் நக்கீரனிடம் உள்ள நிஜ வீடியோக்களோடு அடுத்தடுத்து தொடர்களை எதிர்பார்க்கலாம்” என்றார்.
இதையும் படிங்க: சேது படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவு.. சீயானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் விக்ரம் ..!