சந்திரமுகி 2 தோற்றம் வெளியீடு: பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு, நயன்தாரா, ஜோதிகா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படம் ஒரு ஆண்டு காலம் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. ரீமேக் படமாக இருந்தாலும் ரஜினியின் வசீகரம் மற்றும் ஜோதிகாவின் நடிப்பு ஆகியவற்றால் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
![சந்திரமுகி 2](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-08-2023/tn-che-02-cinema-sitharalkal-script-7205221_05082023130046_0508f_1691220646_627.jpg)
இந்த நிலையில் தற்போது சந்திரமுகி 2ஆம் பாகம் தயாராகி உள்ளது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. பி.வாசு இயக்கியுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்ஆர்ஆர் படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி, இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படம் விநாயகர் சதுர்த்திக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வேட்டையன் கெட்டப்பில் இருந்த ராகவா லாரன்ஸ் தோற்றம் வெளியானது. தற்போது சந்திரமுகியாக நடித்துள்ள கங்கனா ரனாவத் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் "ரசவாதி": இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரசவாதி – The Alchemist’ திரைப்படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 'மௌன குரு' மற்றும் 'மகாமுனி' போன்ற திரைப்படங்களின் மூலம் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாந்தகுமார். இந்த இரண்டு படங்களிலும் வேலை பார்த்த அனைவரின் சினிமா பயணத்தையும் இந்தப் படங்கள் அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்தியது.
![ரசவாதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-08-2023/tn-che-02-cinema-sitharalkal-script-7205221_05082023130046_0508f_1691220646_966.jpg)
இப்போது இயக்குநர் தனது புதிய கிரைம் ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'ரசவாதி' - The Alchemist’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், மற்றும் பல நடிகர்கள் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
33 வருட திரையுலக அடையாளம் தங்கர் பச்சான்: தலைசிறந்த ஒளிப்பதிவாளராக, எழுத்தாளராக, இயக்குநர் என தங்கர் பச்சானின் கடந்த 33 வருட பாரம்பரிய திரைப்பயணம் என்பது தமிழ் சினிமாவின் மதிப்பை அதிகளவில் உயர்த்தவே செய்துள்ளது. புதுமையான, வித்தியாசமான காட்சி கலவைகள் மூலம் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டது, மனதை தொடும் நிஜ வாழ்வியல் கதைகளை எழுதியது மற்றும் ஒரு படைப்பாளியாக மகத்தான படைப்புகளை கொடுத்தது என நல்ல சினிமாவின் அடையாள சின்னமாகவே மாறியிருக்கிறார், தங்கர் பச்சான்.
![தங்கர் பச்சான் பிறந்தநாள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-08-2023/tn-che-02-cinema-sitharalkal-script-7205221_05082023130046_0508f_1691220646_510.jpg)
இன்று தங்கர் பச்சான் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரை வாழ்வை எடுத்துக்காட்டும் வகையில் ஷோ ரீல் வெளியிடப்பட்டுள்ளது. இவரது இயக்கத்தில் விரைவில் கருமேகங்கள் கலைகின்றன என்ற படம் வெளியாக உள்ளது.
பா.ரஞ்சித் வெளியிட்ட ‘வேம்பு’ பட டைட்டில் லுக்: மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.
![பா.ரஞ்சித் வெளியிட்ட ‘வேம்பு’ பட டைட்டில் லுக்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-08-2023/tn-che-02-cinema-sitharalkal-script-7205221_05082023130046_0508f_1691220646_985.jpg)
வேம்பு படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். தனுஷ் நடித்த தங்கமகன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஆ.குமரன் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மிருதன் படத்திற்கு படத்தொகுப்பு செய்த கே.ஜே வெங்கட்ரமணன் இந்த படத்தின் படத்தொகுப்பை கவனித்துள்ளார். மணிகண்டன் முரளி இசையமைத்து உள்ளார்.
படம் குறித்து இயக்குநர் ஜஸ்டின் பிரபு கூறும்போது, “யதார்த்தமான ஒருவரின் வாழ்வியல் கதையாக இந்த படம் உருவாகி உள்ளது. தங்களது சொந்த வாழ்க்கையைத் தாண்டி அவர்கள் இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள், சூழல் அவர்களை எப்படி பெரிய மனிதர்கள் ஆக்குகிறது என்பதை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. எளிய மக்களில் இருந்து பெரிய மக்கள் வரை சார்ந்ததாக இந்த கதை இருக்கும்” என்றார்.
இதையும் படிங்க: ’இதெல்லாம் தலைவருக்கு மட்டும் தான் நடக்கும்’... தனியார் நிறுவன அறிவிப்பால் மார்தட்டி கொள்ளும் ரஜினி ரசிகர்கள்!!