அரை நூற்றாண்டுக்கு மேலாக சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இன்று இரண்டாவது நினைவுதினமாகும்.
ஆந்திர மாநிலத்தில், நெல்லூரில் பிறந்து வளர்ந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு முதலில் இன்ஜினியர் ஆக வேண்டும் என்பதே அதிகபட்ச கனவாக இருந்தது. பின்னர் பாடகி ஜானகி அவர்களால் எஸ்.பி.பியின் திறமை கண்டறியப்பட்டு சினிமாவில் பாடகராக வாய்ப்பு தேட ஆரம்பித்தார். எஸ்.பி.பி 1966ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாதை ராமண்ணா(1967) என்ற தெலுங்கு படத்தில் பாடகராக அறிமுகமானார்.
தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, தமிழ் மொழி உச்சரிப்பு சரியாக வராததால் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் தமிழில் பாடும் வாய்ப்பை இழந்தார். பின் அவரின் ஆலோசனையின்பேரில் ஓராண்டு தமிழ் மொழிப்பயிற்சி பெற்று, தமிழ் சினிமாவில் பாடும் வாய்ப்பைப்பெற்றார். இதனையடுத்து எஸ்.பி.பி கிடைத்த முதல் வாய்ப்பில் இருந்து கடைசி நாள்வரை 54 ஆண்டுகளாக எல்லா மொழிகளிலும் சரியான உச்சரிப்புடன் பாடிய பாடகர் என்ற சிறப்புடன் விளங்கினார்.
எஸ்.பி.பி தமிழில் பாடி வெளியான முதல் பாடல் 'ஆயிரம் நிலவே வா' பாடல் ஆகும். 1969இல் எம்.ஜி.ஆர் நடிப்பில் அடிமைப்பெண் படத்தில் இப்பாடல் இடம்பெற்றது. ஆனால், அவர் முதலில் 1966இல் பாடல் பாடிய தமிழ்த்திரைப்படம் வெளியாகவில்லை.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 1979இல் வெளிவந்த சங்கராபரணம் என்ற திரைப்படத்திற்காகப் பாடல்களைப் பாடியதன் மூலம் முதன்முதலாக தேசிய விருது பெற்றார். இளையராஜா வளர்ந்து வரும் இசையமைப்பாளராக இருந்த காலகட்டத்தில் அறிமுகமான எஸ்.பி. பாலசுப்பிரமணியம், அவர் இசையில் ஆயிரக்கணக்கான வெற்றி பாடல்களைப் பாடியுள்ளார். இவர்களின் கூட்டணியில் வெளியான பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் காலத்தால் அழியாத பாடல்களாக இருந்து வருகிறது.
கேளடி கண்மணி, உதய கீதம், மெளன ராகம் என இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடிய பாடல்கள் இன்றளவும் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கிறது. பின்னர் ஏ.ஆர். ரஹ்மான் முதல் அனிருத் வரை தன்னை மேம்படுத்திக்கொண்டு அவர்கள் இசையில் பல வெற்றிப்பாடல்களை பாடியுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் நடிகர் ரஜினிகாந்துக்கு பல வெற்றிப் பாடல்களை பாடியுள்ளார். "45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின்போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை'' என எஸ்.பி.பி மறைந்தபோது ரஜினிகாந்த் உருக்கமாக கூறியிருந்தார்.
40,000 பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். கன்னடப் படத்திற்காக ஒரே நாளில் 21 பாடல்கள் பாடியது, இந்தி மொழியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடியது என எஸ்.பி.பியின் சாதனைகள் நீண்டுகொண்டே செல்லும்.
பாடகராக தமிழ் சினிமாவில் உச்சத்தில் வலம் வந்தபோது நடிகராக பல திரைப்படங்களில் நடித்துள்ள எஸ்.பி. பாலசுப்பிரமணியம் புதிய முயற்சிகளை முயன்று பார்ப்பதில் எப்பொழுதும் ஆர்வம் காட்டி வந்துள்ளார். நடிகராக கேளடி கண்மணி, திருடா திருடா, காதலன், ரட்சகன் என பல திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இசையின் குரலாக வலம் வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்னும் மகா கலைஞன் காற்றில் கரைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
இதையும் படிங்க: நித்தம் ஒரு வானம் நிச்சயம் நல்ல உணர்வைத் தரக்கூடிய படமாக இருக்கும்