சென்னை: இயக்குநர் கீரா இயக்கத்தில் ஜூனியர் எம்ஜிஆர் மற்றும் யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் இரும்பன். இந்த திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய சீமான், “ஸ்ரீ காந்த் தேவா இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டியவர். ஜூனியர் எம்ஜிஆர், நீங்கள் வருவதற்கு எம்ஜிஆர் பெயர் உதவலாம். ஆனால், இங்கு வெற்றி பெற கடுமையான உழைப்பு வேண்டும். எம்ஜிஆர் கடுமையான உழைப்பை கொட்டியதால்தான், இன்று வரை எல்லோரது மனதிலும் அவர் நிலைத்து நிற்கிறார்.
விஜய் திரையுலகில் அப்பாவின் மூலம் வந்தாலும், தனது கடின உழைப்பால் இப்போது சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். முதலில் இப்படத்திற்கு ‘குறவன்’ என்று பெயர் வைத்திருந்தனர். அதனை நான் மாற்ற சொன்னேன். தமிழ் இனத்தின் ஆதிக்குடி குறவன் குடிதான். நாங்கள்தான் குறவர்கள். முதல் முதலில் மனிதன் பேசிய மொழி தமிழ்” என்றார்.
இதனையடுத்து பேசிய திருமாவளவன் எம்பி, “இப்படம் தமிழ் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பது எனது விருப்பம். திரைப்படத்துறை ஒரு மிகப்பெரிய வணிகத் தளம். திரைப்படத்துறை மூலம் அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்தக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்த சமூகத்தில் இந்த திரைப்படத்துறை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர்கள் முதல் எதிர்க்கட்சித் தலைவர் வரை திரைப்படத்துறையில் இருந்தவர்கள்தான். அவர்களை தேர்வு செய்தவர்கள் பலவீனமானவர்கள் இல்லை. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்பவர்கள், திரைப்படத்துறையில் இருந்தவர்கள் என கருதலாம்.
திரைப்படங்கள் மூலமாக அரசியல் கருத்துகளை சொல்லும் துணிச்சல் இருந்தது. எம்ஜிஆர் அழகை காட்டி ஆட்சியை பிடிக்கவில்லை. அரசியல் பேசி ஆட்சியை பிடித்தார். தற்போது திரையரங்குகள் ஒரு சிலரின் கட்டுப்பாட்டிலும், சினிமா கார்ப்பரேட் வசமும் உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: 'துணிவு' படத்தில் அஜித்தின் பெயர் என்ன? - மனம்திறந்த மஞ்சு வாரியர்