சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சிவகார்த்திகேயன், லைகா புரொடக்ஷன் சுபாஷ்கரன், எஸ்ஜே.சூர்யா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்படத்தில் நடித்த எஸ்ஜே சூர்யா பேசுகையில், “இது ரொம்ப மரியாதையான வெற்றி.
மாநாடு படத்தில் மாஸ் கிடைத்தது. இப்படத்தில் மரியாதை கிடைத்தது. தமிழகத்தின் ராஜ்குமார் ஹிரானி இயக்குனர் சிபி. ஜோடி No.1 நிகழ்ச்சயில் சிவகார்த்திகேயன் போட்டியாளராக இருந்தவர். நான் நடுவராக இருந்தேன். இவரது வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. எல்லோரது வீட்டிலும் செல்லப்பிள்ளையாக இருக்கிறார். மிகப்பெரிய உயரத்திற்கு சிவகார்த்திகேயன் சென்றுள்ளார். இப்படத்தில் எனது நடிப்பை பார்த்து பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நன்றி” எனக் கூறினார்.
இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், “எதிர் நீச்சல் படம் வெளியான போது ரூ.25 கோடி வசூலித்தது. சரியாக 10 வருடங்கள் கழித்து டான் 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது. இதை 200 கோடியாக நீங்கள் மாற்ற வேண்டும் சிவா” எனப் பேசினார்.
உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “டான் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துகள். நான் சொன்னதுபோல் டாக்டர் படத்தின் வெற்றியை இப்படம் மிஞ்சிவிட்டது. இப்படத்தில் முதலில் நான் நடிக்க வேண்டியதாக இருந்தது. கதையை கேட்டு நான் வேண்டாம் என்றேன். பள்ளி மாணவனாக என்னால் நடிக்க முடியாது. உணர்ச்சிகரமாகவும் என்னால் நடிக்க முடியாது. இந்தியன் 2 படத்தின் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன” என்றார்.
இப்படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் சூரி, ”இயக்குனர் சிபி என்னிடம் கதை கூறியபோது காமெடிக்கு இப்படத்தில் வேலையில்லை, உங்கள் கதாபாத்திரம் காமெடிக்கு ஏற்றவாறு இருக்காது. மேலும் சினிமாவை தாண்டி நீங்கள் சிவகார்த்திகேயனை வழிநடத்தும் அண்ணனாக வாழ்கிறீர்கள். அப்படி ஒரு அண்ணனாக இந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். நான் மிகவும் சந்தோஷம் என்றேன்” என நெகிழ்ச்சியாக பேசினார்.
பின்னர் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் பேசியபோது, ”இது உலக சினிமா இல்லை உள்ளூர் சினிமா. முதலில் எனக்கு இந்த கதை பிடிக்கவில்லை, பிறகு இயக்குனர் கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்தார் அப்போது கதை பிடித்திருந்தது. உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் படம் பார்த்துவிட்டு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றார். இயக்குனர் 70 நாள்கள் அவகாசத்தில் படத்தை முடித்து விட்டார். இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த மக்களுக்கு எனது நன்றியை கூறிக்கொள்கிறேன்.
படத்தை பார்த்துவிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மனதார பாராட்டினார். ஒரு மணி நேரம் படத்தில் உள்ள கதாபாத்திரம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். நடிகர் சிலம்பரசன் என்னிடம் போனில் அழைத்து பாராட்டினார். படத்தில் உங்கள் தந்தைக்கு கால் உடைந்த காட்சிகளை கண்டு அழுதுவிட்டேன்“ என்று சிவகார்த்திகேயன் பேசினார்.
இதையும் படிங்க: "விக்ரம்" படத்தில் இடம்பெற்ற பாடல் குறித்து நெகிழ்ந்த ஹாரிஸ்!