பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி வெளியான திரைப்படம், 'லவ் டுடே'. பிரதீப் ரங்கநாதன் படத்தை இயக்கியதுடன் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி இளைஞர்கள் கொண்டாடும் படமாக மாறியது. மேலும் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, 100-வது நாள் ஓடிய படமாக மாறியது.
இந்த 'லவ் டுடே' படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதன், இவானா, இசையமைப்பாளர் யுவன் உள்பட படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் மோகன் ராஜா, நகைச்சுவை நடிகர் சதீஷ், ஜி.பி.முத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் மோகன் ராஜா மேடையில் பேசுகையில், ''AGS உருவான 17 வருடத்தில் 16 வருடத்துக்கு மேல் அந்நிறுவனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி. தனிஒருவன் படத்தின் மூலம் நன்றிக்கடன் பட்டுள்ளேன். கோமாளி, லவ் டுடே படங்களை கொடுத்த பிரதீப்புக்கு நன்றி. இன்றைய இளைஞர்களுக்கு பிரதீப் inspiringஆக உள்ளார்'' என பேசினார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறுகையில், ''இவ்விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. பிரதீப் ரங்கநாதனின் 2 படங்களும் 100 நாட்கள் ஓடச் செய்து விட்டார். அவருடைய அடுத்த படமும் 100 நாட்கள் ஓட வேண்டும். மனமார்ந்த வாழ்த்துகள், அவர் இன்னும் மேன்மேல் செல்ல வேண்டும்'' என்றார்.
நடிகை இவானா கூறுகையில், ''படக்குழுவுக்கு நன்றி... என்னுடைய வாழ்க்கை வேறுமாதிரி செல்கிறது. லவ் டுடே ரிலீஸ் அப்புறம் முதல் நாளில் அர்ச்சனா, ஐஸ்வர்யா இருவரின் அரவணைப்பும் மிகப் பிடித்திருந்தது. பிரதீப் ரங்கநாதனை இயக்குநராகவும் நடிகராகவும் நண்பராகவும் பிடிக்கும். பிரதீப் ரங்கநாதன் என்றாலே சிறப்புதான். சத்யராஜ் சாருடன் நடிப்பதில் சிறு தயக்கம் இருந்தது. ஆனால், நிறைய கற்றுக்கொடுத்தார்'' எனத் தெரிவித்தார்.
AGS அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ''பிகில் இசை வெளியீட்டு விழாவில் கடைசியாக பேசியது. எனது வாழ்க்கையில் கீழே சென்ற போது ஒரு வெற்றி கொடுத்த படம், லவ் டுடே. பிரதீப் கதை கூறிய பின் பெரிய ஓபனிங் கிடைக்கும் என நம்பினோம். ஒவ்வொரு படத்தை தயாரிக்கும்போதும் ஹிட் கொடுக்க வேண்டும் என நினைப்போம். அதில் இந்தப் படம் முதலிடத்தில் இருக்கும்போது மிக்க மகிழ்ச்சி. படக்குழுவுக்கு நன்றி. பிரதீப் உடைய கால்ஷீட் எங்களிடம்தான் உள்ளது'' என்றார்.
இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், ''அனைவருக்கும் நன்றி தெரிவிக்கத்தான் இந்த நிகழ்ச்சி. ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்துவது எளிதல்ல. அதை செய்ததை நான் எப்போதும் மறக்கமாட்டேன். ரூ.100 கோடியை உலகம் முழுவதும் இந்தப் படம் தாண்டி உள்ளது.
மலை ஏறுவதற்கு என்ன வேண்டும் என்பதைத் தாண்டி முதலில் மலை வேண்டும். அந்த மலை தான், லவ் டுடே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்வில் ரொம்ப கஷ்டப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் பெரிய மலை ஏறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்'' என்றார்.
இதையும் படிங்க: இணைய ரசிகர்களை கிறங்க வைக்கும் ‘மொக்க காதல்’ ஆல்பம் பாடல்