இந்தியாவின் 68ஆவது தேசிய விருதுகள் இன்று(ஜூலை 22) மாலை அறிவிக்கப்படவுள்ளது. கரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு திரையரங்குகள் கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு இருந்தன. தமிழ் சினிமாவில் படங்களும் அதிக அளவில் வெளியாகவில்லை. இதனால் தமிழ் சினிமா ஸ்தம்பித்து போய் இருந்தது.
மேலும் சில படங்கள் ஓடிடியில் வெளியாகின. குறிப்பாக சூர்யாவின் சூரரைப்போற்று, ஆர்.ஜே.பாலாஜியின் மூக்குத்தி அம்மன், க/பெ.ரணசிங்கம், பொன்மகள் வந்தாள், பென்குயின் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகின. இதில் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
அதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’க/பெ.ரணசிங்கம்’ படமும் வெற்றிபெற்றது. போஸ் வெங்கட் இயக்கி திரையரங்குகளில் வெளியான ’கன்னிமாடம்’ மற்றும் புதுமுகங்கள் நடித்த ’காவல்துறை உங்கள் நண்பன்’ உள்ளிட்ட படங்களும் நல்ல வரவேற்பைப்பெற்றன. மேலும் இந்தப் படங்கள் எல்லாம் தேசிய விருதுகள் தேர்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதனால் இன்று வெளியிடப்படவுள்ள விருதுகள் பட்டியலில் இந்தப் படங்களுக்கு விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக சூர்யாவின் 'சூரரைப்போற்று' திரைப்படத்திற்காக சூர்யாவுக்கு விருது கிடைக்கும் என்று பெரும்பாலானோராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்கர் வரை சென்ற 'சூரரைப்போற்று' தேசிய விருது பெறுவது உறுதி என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அப்படி சூர்யாவுக்கு விருது கிடைக்கும்பட்சத்தில் அவருக்கு இது மிகப்பெரிய பிறந்தநாள் பரிசாக இருக்கும். ஏனெனில் நாளை சூர்யா தனது 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'இரவின் நிழல்' ஒரு உலக சாதனை படம் - ரஜினிகாந்த் பாராட்டு!