சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடிகர் விஜய்யின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 'அரசுப் பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித்தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில், பத்திரிகைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது" என கேட்டுக்கொண்டார்.
![விஜய்-யின் அறிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14955695_arikkai.jpg)
இது ஒரு புறம் இருக்க, மறுபக்கம் ஏப்.13ஆம் தேதி வெளியாகவுள்ள 'பீஸ்ட்' படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றன. இதனைக்கண்ட நெட்டிசன்கள், வருஷாவருஷம் தன்னோட படத்திற்கு பிரச்னை வருவதால் முன்கூட்டியே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து தன்னோட ரசிகர்களுக்கும், இயக்கத்திற்கும் விஜய் அறிக்கை வெளியிட்டிருப்பதாகக் கூறி வருகின்றனர்.
இணையதளங்களில் விஜய்யின் இந்த அறிக்கையை கேலி செய்யும் விதமாக 'என்ன பயப்படுறீங்களா குமாரு' என்ற வசனங்களுடன் நெட்டிசன்கள் கலாய்த்து வரும் நிலையில், 'பயமா... எனக்கா...' என்று விஜய் ரசிகர்கள் ஒருபுறம் தங்களது தலைவனை விட்டுக்கொடுக்காமல் பிடி கொடுத்து வருகின்றனர்.
![அனல் பறக்கும் பன்ச்சஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14955695_bayama.jpg)
தமிழ் சினிமாவில் நுழைந்த விஜய்: இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனான நடிகர் விஜய் முதன்முதலில் தந்தையின் இயக்கத்தில் வெளிவந்த 'வெற்றி', ரஜினி நடித்த 'நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் அவரது தந்தையே விஜயை கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, சில படங்களில் நடித்துவந்த விஜய், பின்னர் விக்ரமன் இயக்கிய 'பூவே உனக்காக' படத்தின் மூலம் மக்கள் மனங்களில் இடம் பிடித்தார்.
![குட்டி தளபதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14955695_small.jpg)
அதனைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த விஜய் தன்னுடைய நடிப்பாலும் தொடர்முயற்சியாலும் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இடத்திற்கு உயர்ந்தார். அவர் உயர உயர கூடவே பல சர்ச்சைகளும் தொடர்ந்தன. அவர் எந்த சர்ச்சையிலும் சிக்கவில்லை என்றாலும் அவரது படங்கள் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியுள்ளன. இது எல்லாவற்றிற்கும் ஆரம்பப்புள்ளியாக அமைந்த படம்தான் காவலன். ஆனால், பிரச்னைக்கு காரணம் காவலன் படம் அல்ல; அவரது முந்தைய படம் ‘சுறா’.
இதுவரை விஜய் படத்திற்கு வந்த பிரச்னைகள் என்னென்னெ? 2010ஆம் ஆண்டு வெளியான ‘சுறா’ படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இதனால், 2011ஆம் ஆண்டு வெளியாக இருந்த ‘காவலன்’ படத்தை திரையிட முடியாது என திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். ‘சுறா’ படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை வழங்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். விஜய் தரப்பும் அமைதி காத்தது. பின்னர் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் படம் வெளியானது.
![சுறா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14955695_sura.jpg)
2012ஆம் ஆண்டு துப்பாக்கி திரைப்படமும் சர்ச்சையில் சிக்கியது. படம் வெளியாகும் முன்பு அல்ல, வெளியான பின்பு. படத்தை பார்த்த இஸ்லாமிய அமைப்புகள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். படம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளது என்றும்; இப்படம் தங்களை இழிவுபடுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டினர். விஜய் மற்றும் படக்குழுவினர் தமிழ்நாடு அரசு மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இப்பிரச்னை ஓய்ந்தது.
![துப்பாக்கி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14955695_thuppaki.jpg)
‘Time to Lead’ என்ற வசனத்தால் நேர்ந்த சோகம்
தொடர்ந்து 2013ஆம் ஆண்டு வெளியான ‘தலைவா’ படம் கொடுத்த பிரச்னை அளவுக்கு வேறு எந்த படமும் விஜய்க்கு பிரச்னை கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் தலைப்புடன் ‘டைம் டூ லீடு’ (Time To Lead) என்ற வசனம் வைத்திருந்தார்கள். அது விஜய் அரசியலுக்கு வரவுள்ளார் என்ற பேச்சு எழத்தொடங்கிய நேரம். எனவே, இப்படத்தை வெளியிட முடியாமல் சிக்கல் நேர்ந்தது.
தமிழ்நாட்டில் வெளியாகும் முன்பே இதர மாநிலங்களில் இப்படம் வெளியானது. இப்படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் தமிழ்நாட்டிலிருந்து கேரளா சென்றதெல்லாம் ஒரு தனிக்கதை. இறுதியில் வசனம் (Time To Lead) நீக்கப்பட்டு, வெறும் ‘தலைவா’ என்ற பெயருடன் படம் வெளியானது. படமும் தோல்வியடைந்தது. படம் வெளியானதும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து வீடியோவும் விஜய் வெளியிட்டார்.
![தலைவா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14955695_thalaiva.jpg)
2014ஆம் ஆண்டு 'கத்தி': இந்தப் படம் வித்தியாசமான வழியில் பிரச்னையைச் சந்தித்தது. அதாவது இப்படத்தின் மூலம்தான் லைகா நிறுவனம் தமிழ் சினிமா தயாரிப்பில் நுழைந்தது. இந்த நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன், ராஜபக்ச-வின் நண்பர் என்றும் அதனால் கத்தி படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாது என்றும் கூறி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள திரையரங்குகளில் கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. இதன் பிறகு தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
![கத்தி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14955695_kaththi.jpg)
புலி எலியான கதை: இதற்குப் பிறகு ‘புலி’ இப்படம் 2015ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் ரிலீசுக்கு முன்தினம் திடீரென புலி படம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், நடிகர் விஜய், ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. விடிய விடிய நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.
இதனால் ரிலீஸ் தினத்தன்று சிறப்புக்காட்சி மற்றும் காலை காட்சிகள் ரத்தாகின. இதனால், ரசிகர்கள் பல்வேறு இடங்களில் ரகளையில் ஈடுபட்டனர். திரையரங்குகளும் சேதப்படுத்தப்பட்டன. இதனால், விஜய் நேரடியாக களத்தில் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் நிதி பிரச்னைக்கு விஜய்-யே பொறுப்பேற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து படம் வெளியானது. ஆனாலும், இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை கொடுத்தது. மேலும், இப்படம் பெரும் தோல்வியைக்கண்டது. இன்று வரையிலும் விஜய் திரைப்பயணத்தில் மறக்க வேண்டிய படமாக 'புலி' அமைந்தது.
![புலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14955695_puli.jpg)
மெர்சல் படத்திற்கு வந்த கரச்சல்: இதனைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு வெளியான 'தெறி' படத்திற்கு, டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்ககூடாது என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதுமட்டுமின்றி விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் 'தெறி' படம் செங்கல்பட்டு பகுதிகளில் வெளியாகவில்லை. இது திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்க, தயாரிப்பாளர் தாணுதான் படம் வெளியாகாமல் இருந்ததற்குக் காரணம் என்றனர். இருப்பினும் படம் வெளியாகி வெற்றி பெற்றது.
![தெறி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14955695_theri.jpg)
‘மெர்சல்’ திரைப்படம் சென்சார் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இப்படத்தில் விலங்குகள் நல வாரிய கடிதம் என பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்தது. கர்நாடகாவிலும் இப்படத்திற்கு எதிர்ப்பு நிலவியது. தமிழ்ப் படங்களை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என கன்னட அமைப்பினர் எதிர்ப்புத்தெரிவித்தனர். மேலும் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் விஜய் குறித்த ஹெச்.ராஜாவின் பதிவு உள்ளிட்ட பிரச்னைகளால் மெர்சல் படம் மெகா ஹிட்டடித்தது.
![மெர்சல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14955695_mersal.jpg)
விஜய் ரசிகர்களுக்கு தடியடி: இதன்பின்னர் வெளியான 'சர்கார்' படம் கதைத்திருட்டு, புகைப்பிடிக்கும் காட்சிகள், அரசியல் வசனங்கள் ஆகியவற்றால் சிக்கலில் மாட்டித் தவித்தது. இவை அனைத்தையும் கடந்து இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. 'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய “எவன எங்க உட்கார வைக்க வேண்டுமோ.... அவனை அங்கே சரியா உட்கார வைத்தீர்கள் என்றால் மெடல் தானாக வந்து சேரும்” என்ற பேச்சு மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியது.
![சர்கார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14955695_sarkar.jpeg)
இது அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது. விஜய்க்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்து தெரிவித்தும் வந்தனர். மேலும் இந்த விழாவின்போது காவல் துறையினர் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும், படத்தின் போஸ்டரும் வியாபாரிகள் மத்தியில் எதிர்ப்பை உண்டாக்கியது. இதுமட்டுமின்றி படத்தின் வசூல் தொடர்பாக விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இது அரசியல் சூழ்ச்சி என விஜய் ரசிகர்கள் கூறிவந்தனர்.
![பிகில்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14955695_bigil.jpg)
வொய் பிளட்; சேம் பிளட்: இந்நிலையில், தற்போது ‘பீஸ்ட்’ படத்திற்கும் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. இப்படத்தில் இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களை இழிவுபடுத்திவிட்டதாகவும் கூறி எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே துப்பாக்கி படத்திற்கு வந்த, அதே பிரச்னைதான் தற்போதும் எழுந்துள்ளது. படம் வெளியான பிறகு மீண்டும் சர்ச்சை ஏற்படலாம்.
![‘பீஸ்ட்’](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14955695_beast.jpg)
ஒவ்வொரு முறை விஜய் படங்கள் வெளியாகும்போது ஏதாவது ஒரு பிரச்னை மற்றும் சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகவே உள்ளது. இந்தத் தொடர் பிரச்னை குறித்து ரசிகர்களிடம் கேட்டபோது, 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்ற கவுண்டமணி பட டயலாக்கிற்கும், ’பீஸ்ட்’ படத்திற்கு பிரச்னை ‘வரும் ஆனா வராது’ என்ற வடிவேலு பல டயலாக்கிற்கும் ஏற்றார்போல ரியாக்ஷனை கொடுத்துவிட்டுச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: 'டான்' திரைப்படத்தையும் கைப்பற்றிய ரெட் ஜெயன்ட்ஸ்