சென்னை: அண்ணாத்தே படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் "ஜெயிலர்" (Jailer). அனிருத் இசை அமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிடவுள்ளது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இன்னொரு நடிகரும் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், தெலுங்கு நடிகர் சுனில் ஜெயிலர் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக கூறி, படக்குழு அதுகுறித்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்து உள்ளனர். ஏராளமான நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதால், இப்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
தெலுங்கில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் சுனில் ஏற்று நடித்த மங்களம் சீனு கதாப்பாத்திரம் மொழிகளைத் தாண்டியும் மக்கள் மனதில் பதிந்தது. தற்போது ஜெயிலர் திரைப்படத்திலும் சுனிலின் நடிப்பைக் காண ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி அருகே மதுபாட்டில் உள்ளே கரப்பான் பூச்சி.. மதுப்பிரியர்கள் ஷாக்..