சென்னை: தமிழ் சினிமா
- மாமன்னன் பார்த்து பாராட்டிய நல்லகண்ணு
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம், மாமன்னன். இந்தப் படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, அற்புதம்மாள் ஆகியோர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி உள்ளனர். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

அதில் “மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்து தங்களுடைய பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு, தோழர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், அன்பிற்குரிய அற்புதம் அம்மாள் ஆகியோருக்கு எங்கள் அன்பும், நன்றியும்” என தெரிவித்துள்ளார்.
- காதல் மனைவிக்கு கவிதை வழி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சினேகன்
பாடலாசிரியர் சினேகன் தமிழ் திரையுலகில் ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். இவரும் நடிகை கன்னிகாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், கன்னிகாவின் பிறந்தநாளை ஒட்டி தனது வழக்கமான பாணியில் கவிதை மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
“உன் பிறந்த நாளை
நான் கொண்டாடுவதிலும்
ஒரு சுயநலம் இருக்கிறது...
நீ மட்டும்
பிறக்கவில்லை என்றால்..
நானும் என் காதலும்
அனாதையாகவே
நின்றிருப்போம்” என்று என் காதல் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் காதலி என்று எழுதியுள்ளார்.
- தமன்னா ஆட்டத்தால் ‘குலுங்கிய’ சோசியல் மீடியா
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம், ஜெயிலர். இப்படத்தில் தமன்னா, மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தில் இருந்து ‘காவாலா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. பாட்டு வெளியான சில மணி நேரத்திலேயே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாடலில் தமன்னாவின் நடனம் மிகவும் பேசப்பட்டு வருகிறது. ‘ரஜினியை விட தமன்னாவைத்தான் பாத்துட்டு இருந்தேன்’ என ஏகப்பட்ட மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
இந்த நிலையில், பாடல் வெளியாகி 24 மணி நேரத்திலேயே இதுவரை 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. அது மட்டுமல்லாமல், சமூக வலைதளங்கள் முழுவதையும் காவாலாவும், தமன்னாவும்தான் ஆக்கிரமித்துள்ளனர்.
- ஜிவி.பிரகாஷின் ‘அடியே’ படத்தின் அடுத்த பாடல் வெளியானது
ஜிவி.பிரகாஷ் குமார் இசை அமைப்பாளராக கைவசம் டஜன் கணக்கில் படங்களை வைத்துள்ளார். அதே போன்று ஏராளமான படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வரிசையில் திட்டம் இரண்டு படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் ‘அடியே’ திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடித்து வருகிறார்.
இதில் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகை கௌரி கிஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மதும்கேஷ், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தில் இருந்து ‘முதல் காதல்’ என்ற இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இப்பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.

- ஷிவாங்கியின் ‘டிக்கி டிக்கி டா’ ஆல்பம் பாடல் வெளியானது
தர்புகா சிவா இசை அமைப்பாளராக இருந்து இயக்குநராக மாறியவர். இவரது இயக்கத்தில் வெளியான ‘முதலும் நீ முடிவும் நீ’ என்ற படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில், இவர் தற்போது இவர் இசை அமைத்து இயக்கியுள்ள ஆல்பம் பாடல் ஒன்று வெளியாகி உள்ளது. இப்பாடலை மதன் கார்க்கியுடன் சேர்ந்து அசல் கோளாறும் எழுதியுள்ளார். டிக்கி டிக்கி டா என்ற பாடலை தர்புகா சிவா, ஷிவாங்கி, அசல் கோளாறு இணைந்து பாடியுள்ளனர். தற்போது இப்பாடல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இதையும் படிங்க: இன்றைய சினிமா: மாவீரன், கொலை படத்தின் அப்டேட்ஸ்!