சென்னை: குன்றத்தூர் அருகே உள்ள சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் ‘தக்ஷாசீலா’ தலைப்பில் தொழில்நுட்பம் மற்றும் பண்பாடு சார்ந்த கருத்தரங்கு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கல்லூரி சேர்மன் பி.ஸ்ரீராம், செயலாளர் S.ஸ்ரீதேவி, முதல்வர் A.ரமேஷ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் கலை கல்லூரியைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சூரி, மிர்ச்சி சிவா, அம்மு அபிராமி, பாபா பிளாக்ஷிப் படக்குழுவினர் மற்றும் நடிகர் கவின் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சூரி, இளையராஜா குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். சூரி நகைச்சுவை நடிகராகத் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கி, ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும், இவர் முதல் முறையாக கதை நாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 31-ல் திரையரங்குகளில் வெளியாகிய நிலையில், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளையராஜாவின் இசை படத்துக்கு மிகப் பெரிய பலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி, இளையராஜா தனது புது ஸ்டுடியோவில், முதன் முதலில் தான் நடித்துள்ள விடுதலை படத்தின் பாடலுக்கு இசையமைத்ததாகவும், அது மட்டுமல்லாமல் தனது 45 ஆண்டு அனுபவத்தில் ஹீரோவை அருகில் வைத்துக் கொண்டு ட்யூன் போடுவது, இதுதான் முதல்முறை என இளையராஜா கூறியதாகவும் சூரி தெரிவித்தார்.
மேலும், மாணவர்கள் நன்றாக படித்து நமது மண்ணில் வேலை பார்க்க வேண்டும் என்றும் பெற்றோர்களை சிறப்பாக பார்த்து கொள்ள வேண்டும் என்றும், மாணவர்கள் மொபைல் போன்களை தேவைக்கும் மற்றும் கவனத்துடனும் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: மீண்டும் தொடங்கிய 'வணங்கான்' பட பணிகள்.. அருண் விஜய் நடிக்கிறார்!