சென்னை: சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து தன்னுடைய கடின உழைப்பால் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர், நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட திரைக்கலைஞராக பயணித்து வருகிறார். சின்னத்திரையைப் போலவே பெரிய திரையிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.
சின்னத்திரையில் காமெடி கிங்காக இருந்த சிவகார்த்திகேயன், பெரிய திரையிலும் தொடக்கத்தில் காமெடி ட்ராக்கிலேயே பயணித்தார். பிறகு நடனம், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்திலும் கலக்க ஆரம்பித்தார். இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, டாக்டர், டான் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் கடந்த சில ஆண்டுகளில் வெளியான டாக்டர், டான் படங்கள் விம்ரசன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று, 100 கோடி வசூல் பட்டியலில் இணைந்தன.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிரின்ஸ். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் வெளியான இப்படம் மிகப் பெரிய தோல்வியை தழுவியது. காமெடி படமாக இருந்தாலும் மோசமான திரைக்கதை ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இது சிவகார்த்திகேயன் மார்க்கெட்டிற்கு சிக்கலாக மாறும் என்று கூறப்பட்டது. இதன் எதிரொலியாக, கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் படத்திற்கும், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கும் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை கணிசமாக குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தேசிய விருது பெற்ற மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கி வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் மாவீரன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தொலைக்காட்சியான சன் டிவி கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மாவீரன் திரைப்படத்தின் திரையரங்கு இல்லாத வியாபாரம் மட்டும் சுமார் 83 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் 35 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளது. தொலைக்காட்சி உரிமையை சன் டிவி 30 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அதோடு இந்தி டப்பிங் உரிமை 12 கோடி ரூபாய்க்கும், ஆடியோ உரிமை 5.5 கோடி ரூபாய் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பிரின்ஸ் படம் ஓடாததால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் அவ்வளவுதான் என்று பேசியவர்களுக்கு மாவீரன் வியாபாரம் பதிலடியாக அமைந்துள்ளது. இதனால் அவரது அடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: Oscars 2023: ஆஸ்கர் வென்று வரலாறு படைக்குமா RRR?... சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!