சென்னை: ஹான்பேல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘சலார்’. இந்த படத்தை பிரஷாந்த் நீல் இயக்கியுள்ளார். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள சலார் திரைப்படம், வருகிற 22ஆம் தேதி வெளியாகிறது. அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள சலார் திரைப்படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
’கேஜிஎஃப்’ என்னும் இந்திய அளவில் மெகா ஹிட் கொடுத்த பிரஷாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணியில் சலார் உருவாகியுள்ளதால் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சலார் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
சலார் படத்தின் டிக்கெட் புக்கிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஹைதராபாத்தில் சலார் படத்தின் முதல் டிக்கெட்டை பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பெற்றுள்ளார். ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம், பிரபாஸ் திரை வாழிவில் திருப்புமுனையாக அமைந்தது. இதனையடுத்து பிரபாஸும், ராஜமௌலியும் நெருங்கிய நண்பர்கள் ஆகினர்.
இதன்படி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், தனது சமூக வலைத்தள பக்கத்தில், சலார் படத்தின் நிஜாம் பகுதிக்கான (nizam region) முதல் டிக்கெட்டை இந்திய சினிமாவின் பெருமைமிகு இயக்குநர் ராஜமௌலி பெற்றதாக பதிவிட்டுள்ளது. ராஜமௌலியிடம் சலார் படத்தின் முதல் டிக்கெட்டை நடிகர் பிரபாஸ், பிருத்விராஜ் ஆகியோர் வழங்கியுள்ளனர். அப்போது இயக்குநர் பிரஷாந்த் நீலும் உடனிருந்தார்.
மேலும், நிஜாம் பகுதியில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், சலார் படத்தின் தியேட்டர் உரிமையை 90 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் நிஜாம் பகுதியில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய திரைப்படம் என்ற சாதனையை சலார் திரைப்படம் படைத்துள்ளதாகத் தெரிகிறது. சலார் திரைப்படம் வெளியாகும் டிசம்பர் 22ஆம் தேதியன்று ஷாருக்கான் நடித்துள்ள டங்கி திரைப்படம் வெளியாகிறது. மேலும் 21ஆம் தேதி மோகன்லால் நடித்துள்ள ’நெரு’ திரைப்படமும் வெளியாகிறது.
இதையும் படிங்க: பார்க்கிங் பட இயக்குநருக்கு தங்க வளையம் பரிசளித்த ஹரிஷ் கல்யாண்!