சென்னை: ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ராகுல் ப்ரீதி சிங் நடித்துள்ள 'அயலான்' (Ayalaan) திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், மாரி செல்வராஜ், கருணாகரன், இயக்குனர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் புதுவித கதைக்களத்துடன் ரசிகர்களை மகிழ்விக்க வரும் பொங்கல் அன்று வெளியாகள்ளது.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ராஜேஷ் பேசும்போது, "தமிழ் சினிமாவிற்கு அயலான் படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். உங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் பல கோடிகளை தாண்டி விட்டனர். நீங்களும் அந்த நிலையை அடைவீர்கள். நீங்கள் பவுடர், ரத்தத்தை நம்பாமல் ஏலியனை நம்பியுள்ளீர்கள். இப்படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 5ம் தேதி வெளியாகும். இப்படத்தால் சிவகார்த்திகேயனுக்கு பல கோடி கடன் என்கின்றனர். அது எல்லாம் முடிந்துவிட்டது. இது அயலான் பொங்கல்" என தெரிவித்தார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பேசும்போது, "புதிய தலைமுறை கலைஞர்களுடன் பணிபுரிந்துள்ளேன். சிஜி என்றதும் பயம் வந்தது, காதலன் படத்தில் சிஜி இருப்பதாக சொன்னார் சங்கர். ஆனால் என்னவளே பாடலில் பேப்பரில் வருவதுபோல் சிஜி செய்துவிட்டனர். இது எப்படி இருக்கும் என நினைத்தேன். ஆனால் சிஜி நன்றாக இருந்தது. இதற்காக ஐந்து மடங்கு வேலை செய்ய வேண்டி இருந்தது. இயக்குநர் ரவிக்குமார் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வேலை செய்துள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே" என்று கூறினார்.
மாரி செல்வராஜ் பேசும்போது, "இயக்குநர் ரவிக்குமார் ஒரு நேர்மறையான ஆளுமை. ஒரு படத்தை வைத்துக்கொண்டு வலிகளை சுமந்து கொண்டு இருக்கிறார். இந்த ஐந்து வருடத்தில் எந்தவித மாற்றமுமின்றி இருக்கிறார். உங்க மனசுக்கு நல்லது நடக்கும். திறமையான மனிதர்கள் அமைதியாக இருப்பார்கள். சென்னை வந்தது முதல் நான் பழகிய ஆள் சிவகார்த்திகேயன். நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம். நான் பால் போட்டால் சிக்ஸர் தான்.
இவரால் தான் நான் கிரிக்கெட் விளையாடுவதையே விட்டேன். தென் மாவட்டங்களில் பெய்த கனமழைக்கு ரகுமான் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து அரிசி அனுப்பி வைத்தனர். தென்மாவட்ட மக்கள் சார்பாக நன்றி கூறிக் கொள்கிறேன். கலைப்புலி தாணு, ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகியோரும் அனுப்பினர். அவர்கள் இல்லை என்றால் அந்த மக்கள் இவ்வளவு விரைவாக மீண்டு வந்திருக்க மாட்டார்கள். சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசை. நிச்சயம் அதற்கு வாய்ப்பு இருக்கு, கண்டிப்பாக அது நடக்கும்" என தெரிவித்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, "இந்த மேடை நிறைய வகையில் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். அயலான் வருமா வந்துவிடுமா? எப்போ வரும்? என்று பல கேள்வி வரும். பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இன்னொரு படம் ஈசியா பண்ணிவிடலாம். இது இவர்களை தாண்டி பெரிய ஆள் ஆக வேண்டும் என்று நினைத்து பண்ணியதில்லை. இது தொடங்கும் முன் பான் இந்தியா இல்லை. இது தமிழ் மக்களுக்காக பண்ணியது.
நாம ஆசைப்பட்ட படம் கண்முன் தெரிகிறது. இதில் நாமும் நடித்துள்ளோம் என்பதில் சந்தோஷமாக உள்ளது. இதில் சரக்கு, புகை பிடித்தல், கிளாமர், போதைப் பொருள் என எதுவும் கிடையாது. குழந்தைகளுக்கான விஷயங்கள் இருக்கும். ஏ.ஆர் ரகுமானின் வெறித்தனமான ரசிகரின் நானும் ஒருவன். என் படத்தில் ரகுமான் இசை வருது என்பதை விட எனது வாழ்க்கையில் வேறு என்ன இருக்கு. படத்தை பார்த்து முதலில் சூப்பர் என்று சொன்னவர் ரகுமான்.
டீஸரை விட ட்ரெய்லர் இன்னும் நன்றாக இருக்கும். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். (அன்பறிவு மாஸ்டர் பற்றி பேசும் போது நானும் இரட்டையராக இருந்தால், நான் ஒருபடமும் அவர் ஒரு படமும் போய் இரட்டை சம்பளம் வாங்கலாம். எங்க ஒரு படத்திற்கு போனாலே சம்பளம் தரமாட்டேங்குறாங்க என்று நகைச்சுவையாக பேசினார்)
ரகுமான் இசையில் நான் பாடல் எழுதியுள்ளேன். இப்படத்தில் அயலானாக நடித்த வெங்கடேஷ் நாயகனாக நடித்துள்ள மதிமாறன் திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது அவருக்கும் வாழ்த்துகள்.
பாய்ஸ் படத்தில் சித்தார்த் அத்தனை அழகாக இருப்பார். அயலானுக்கு குரல் கொடுத்த சித்தார்த்துக்கு நன்றி. பணம் வாங்காமல் பண்ணிக் கொடுத்தார். இதுபோன்ற படங்கள் வருவது அபூர்வம். ஆரம்பத்தில் இருந்து இப்படத்தின் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. இப்படம் நிச்சயம் உங்களை சந்தோஷப்படுத்தும். நீங்கள் என்னை அண்ணா என்று சொல்கிறீர்கள். சிலர் திட்டுவார்கள். நடிப்பு வரவில்லை என்பார்கள் அதனை நான் காதில் வாங்குவதில்லை.
என்னை பிடித்தவர்களுக்கு அவர்களுக்கு பிடித்த படத்தை தொடர்ந்து பண்ண வேண்டும் என்று ஆசை. என்னை வெறுப்பவர்களுக்கு நான் பதில் கூட சொல்ல விரும்பவில்லை. இந்த படத்துக்கு நான் உதவி செய்தேன் என்கின்றனர். சம்பளம் வாங்காததற்கு ஆர்த்தி மாதிரி ஒருவர் எனக்கு இருப்பதால் தான். நம்ம ரவிக்குமார் அண்ணன் என்றார். டாக்டர் சமயத்திலும் நம்ம நெல்சன் அண்ணன்தானே என்றார். கனா படத்துக்கும் அப்படியேதான்.
எல்லோரும் கொடுத்த தைரியம் தான் இப்படத்தை இங்கு கொண்டு வந்து நிறுத்த வைத்துள்ளது. கஷ்டப்பட்ட எல்லோருக்கும் இது ஒர்த் என்று தோன்றும். பணம் கொடுத்து பார்க்கும் அனைவருக்கும் இது ஒர்த் என்று தோன்றும். எனது மகன் குகன் முதலில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இதுதான் என தெரிவித்து தனது மகன் குகனை மேடைக்கு வரவழைத்து பேச வைத்தார்.
மேலும் ஏ.ஆர் முருகதாஸ் படத்தை அடுத்து மாதம் இறுதியில் தொடங்க உள்ளோம். ராஜ்குமார் பெரியசாமி படம் அதிக ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இதனை முடித்துக்கொண்டு பக்கா மாஸ் என்டர்டெயின்மென்ட் படம் பண்ண உள்ளேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திரைத்துறையினர் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா.. சென்னையில் நடைபெற்ற பூமி பூஜை..!