சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘லியோ’. இப்படத்தில் த்ரிஷா, மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் சமீபத்தில் நடந்து முடிந்தது. காஷ்மீரில் கடும் குளிரிலும் படப்பிடிப்பு நடந்து உள்ளது. படப்பிடிப்பு சமயத்தில் தாங்கள் பட்ட கஷ்டங்கள் குறித்து படக்குழுவினர் வீடியோ வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய பட காட்சிகளும் காஷ்மீரில் நடக்க உள்ளது. ‘ரங்கூன்’ படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மண்டேலா என்ற வெற்றிப் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க உள்ளது. இதற்காக படக்குழுவினர் காஷ்மீரில் லொகேஷன் பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். லியோ படக் குழுவினர் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தி உள்ளதால் அவர்களிடம் ராஜ்குமார் பெரியசாமி படக்குழுவினர் ஆலோசனை கேட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்திற்கு ‘எஸ்கே 21’ என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக முன்னேறிய சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பது திரைத்துறையினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விக்ரம் படம் போல் அனைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கும் - சிம்பு