செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ளது, புகழ் பெற்ற அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இங்கு பல வகையான விலங்குகள், பறவைகள் போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஷேரு என்ற சிங்கமும் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிரபல திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், அந்த சிங்கத்தை ஆறு மாத காலத்துக்கு தத்து எடுத்துக் கொண்டு உள்ளதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஷேரு என்ற மூன்று வயது ஆண் சிங்கத்தை 6 மாத காலத்திற்கு தத்தெடுத்துக் கொண்டுள்ளார்.
இதனை உயிரில் பூங்கா நிர்வாகம் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் கூறியுள்ளது. மேலும், சிவகார்த்திகேயன் சிங்கத்தை தத்தெடுத்துக் கொண்டுள்ள செயல் அந்த சிங்கத்தின் அன்றாட பராமரிப்புக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2018ஆம் ஆண்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனு என்ற புலியைத் தத்தெடுத்தார். இதனையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு அதே விலங்கியல் பூங்காவில் மீண்டும் ஒரு வெள்ளைப் புலியைத் தத்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: chandramukhi 2: சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!
நடிகர்களில் பலர் ஏழை மாணவர்கள் படிப்பதற்கு உதவி செய்து வருகின்றனர். வெளிநாடுகளில் புகழ் பெற்ற நடிகர்கள் குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்வதும் உண்டு. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் புதுமையாக புலி, சிங்கங்களை தத்தெடுத்துக் கொண்டுள்ள செயல் சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தனது தந்தையின் பிறந்தநாளன்று குறித்து சிவகார்த்திகேயன் பகிர்ந்த வாட்ஸப் ஸ்டேட்டஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அவர் தந்தை குறித்து ”நம் கையில என்ன இருக்கிறது என கவலைப்படாமல், மற்றவர்களுக்கு வெளியே தெரியாமல் உதவ வேண்டும் என கற்றுக் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் எப்போதும் நினைவு கூறப்படுவீர்கள் அப்பாவின் 70வது பிறந்தநாள்” என குறிப்பிட்டிருந்தார்
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வருகிற ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மண்டேலா படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற மடோன் அஷ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அதிதீ ஷங்கர், மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ளனர். இது தவிர ரங்கூன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதையும் படிங்க: முன்னாள் சபாநாயகர் தனபால் கதையா மாமன்னன்? - உண்மை நிலவரம் என்ன?