சென்னை: பாம்பே ஜெயஸ்ரீபுகழ்பெற்ற கர்நாடக இசை பாடகி ஆவார். கர்நாடக பாடகியாக மட்டுமின்றி இசைக் கலைஞரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் சினிமா பாடல்களையும் பாடியுள்ளார். தமிழில் எம்.எஸ். விஸ்வநாதன் தொடங்கி ஏ.ஆர். ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் , வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, கோவிந்த் வசந்தா உள்ளிட்ட பேசப்படும் இசை அமைப்பாளர்கள் இசையில் பல்வேறு படங்களில் பல வெற்றிப் பாடல்களை பாடியுள்ளார்.
இந்த நிலையில் இவர் லண்டனுக்கு இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தார். ஹோட்டலில் தங்கியிருந்த அவருக்கு திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது மருத்துவமனையில் உள்ள அவருக்கு முக்கிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் விரைவில் மீண்டுவருவார் என்று நம்பப்படுவதாக நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதால் கோமா நிலைக்கு சென்றுவிட்டார் என்றும் மற்ற உறுப்புகள் சீராக உள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளன. லண்டனில் இன்று (மார்ச் 24) மாலை நடக்க இருந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவே பாம்பே ஜெயஸ்ரீசென்று இருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மின்னலே படத்தில் இவர் பாடிய வசீகரா என்ற பாடலுக்காக ஃபிலிம்பேர் விருது பெற்றார். கஜினி படத்தில் சுட்டும் விழி சுடரே படத்திற்கும் ஃபிலிம்பேர் விருது வாங்கியிருந்தார்.
தமிழக அரசின் கலைமாமணி விருதும் பாம்பே ஜெயஸ்ரீபெற்றுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாம்பே ஜெயஸ்ரீ விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தமிழில் பார்த்த முதல் நாளே, வசீகரா, ஊரெல்லாம் உன்னை கண்டு , ஒன்றா இரண்டா ஆசைகள், தீண்ட தீண்ட, மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம் உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடி இசை ரசிகர்களுக்கு விருந்து படைத்தவர் பாம்பே ஜெயஸ்ரீ. இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்தான் பாம்பே ஜெயஸ்ரீவிரைவில் குணமடைய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
இதையும் படிங்க: 39 ஆண்டுகளுக்கு பின் இணைந்த வைரமுத்து - சித்ரா கூட்டணி!