ஹைதராபாத்: பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிப்பில், கடந்த ஜனவரி மாதம் வெளியான "பதான்" திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. இப்படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்து, ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.
இப்படத்தைத் தொடர்ந்து ஷாருக்கான் அட்லீ இயக்கத்தில் "ஜவான்" படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாகவும், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். பக்கா ஆக்ஷன் படமாக உருவாகும் ஜவான், வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதனிடையே ஷாருக்கானின் மகள் சுஹானா கான் விரைவில் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். சுஹானா கான், தி ஆர்ச்சிஸ் (The Archies) என்ற படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். இப்படத்தை கல்லி பாய் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஜோயா அக்தர் இயக்குகிறார். இதில், நடிகர் அமிதாப் பச்சனின் பேரன் அக்ஸ்த்யா நந்தா, போனி கபூரின் மகள் குஷி கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. புதுமுகங்களான வேதாந்தா ரெய்னா, மிஹிர் அஹூஜா ஆகியோரும் இப்படத்தில் அறிமுகமாகின்றனர். 1960-களில் நடக்கும் மியூசிக்கல் படமாக இப்படம் உருவாகிறது. இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் தனது மகள் சுஹானா கான் உடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பதான் பட இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தை, ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் சித்தார்த்தின் மார்ஃபிக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளது.
இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தந்தையும் மகளும் இணைந்து நடிக்கும் இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதைக்கு ஷாருக்கானும், சுஹானா கானும் பொருத்தமாக இருப்பார்கள் என்பதால், அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.