சென்னை: தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் திரைக்கதையை நூலாக பதிப்பித்து வெளியிடும் பழக்கம் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. முக்கியமாக பாரதி, பெரியார், களவாணி, அழகர்சாமியின் குதிரை, அந்த நாள், சத்தம் போடாதே, சந்தியா ராகம், ரிதம், ஹே ராம், அங்காடித்தெரு, அஞ்சாதே மற்றும் அப்பா உள்பட ஏராளமான வெற்றி பெற்ற படைப்புகளின் திரைக்கதை நூலாக வெளியாகி உள்ளது.
அந்த வகையில் தற்போது ‘ஆதார்’ என்னும் திரைப்படத்தின் திரைக்கதை நூலும் வெளியிடப்பட்டுள்ளது. வெண்ணிலா கிரியேசன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில் கருணாஸ், அருண்பாண்டியன், ரித்விகா, இனியா, உமா ரியாஸ் கான், 'பாகுபலி' பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர். படம் வெளியாவதற்கு முன்பே நேர்மறையான விமர்சனங்களை இப்படம் பெற்று வருகிறது.
இந்த திரைக்கதை நூலின் முதல் பிரதியை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் வெளியிட்டார். அதனை திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படத்தின் நாயகனான நடிகர் கருணாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேசுகையில், '' என்னுடைய 22 ஆண்டு கால திரையுலக அனுபவத்தில் மூன்று படைப்புகளை மட்டுமே முத்தாக படைத்திருக்கிறேன். கடந்த ஐந்தாண்டு காலமாக ஆய்வு செய்து உருவாக்கிய திரைக்கதைதான், ஆதார்.
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இதன் திரைக்கதையை எழுதி இருக்கிறேன். இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தை அளிக்கும். இதன் திரைக்கதையை நூலாக எழுதி வெளியிட வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.
இதனை தயாரிப்பாளரிடத்தில் தெரிவித்தவுடன் அவரும் முழு சம்மதம் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து இந்த நூல் தரமான வடிவில் தயாராகி இருக்கிறது. நூலை வாசித்த பிறகும் திரைப்படத்தை பார்க்கும் போதும், வாசகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரே விதமான உணர்வை அளிக்கும் என நம்புகிறேன்'' என்றார்.
இதையும் படிங்க: இந்தாண்டு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட குஜராத்தி திரைப்படம்!