சென்னை: வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா (Varisu Audio Launch) இன்று (டிச.24) சென்னையில் நடைபெற்றது. தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.
இந்த நிலையில் இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதனால் விஜய் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். சன் டிவி இதன் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளதால் மீடியாவுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால், இன்று மதியம் முதலே விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் நேரு ஸ்டேடியத்தில் கூடியுள்ளனர். பல பேர் டிக்கெட் இல்லாமல் உள்ளனர். எப்படியாவது விஜயைப் பார்த்துவிட வேண்டும் என்று வந்த ரசிகர்கள் கதவு திறக்கப்பட்டதும் மடமடவென உள்ளே புகுந்தனர். அவர்களை அங்கு காவலுக்கு இருந்த போலீசார் தடுக்க முயன்றனர். ஆனால், அவர்களையும் மீறி ரசிகர்கள் உள்ளே நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், போலீசார் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் டிக்கெட் இருப்பவர்கள் மட்டுமே அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ரசிகர்களின் தள்ளுமுள்ளால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: Varisu Audio Launch: லண்டன் செல்கிறாரா விஜய்?