உலக திரைத்துறையில் வழங்கப்படும் புகழ்பெற்ற விருதாக கருதப்படுவது, ஆஸ்கர் விருதாகும். இந்த ஆஸ்கர் விருது குழுவில் ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறை சார்ந்த கலைஞர்களுக்கு அழைப்புவிடுக்கப்படுவது வழக்கம்.
இயக்குநர்கள், நடிகர்கள் என வெவ்வேறு துறையினருக்கும் தனித்தனியாக இதில் மொத்தம் 17 கிளைகள் உள்ளன. ஏற்கெனவே உறுப்பினராக இருக்கும் இரண்டு பேர் முன்மொழிவதன் மூலம் அவர்களில் தகுதியானவர்களாக கருதப்படுபவர்களுக்கு குழுவிலிருந்து அழைப்புவிடுக்கப்படும்.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டு உலகம் முழுவதிலுமிருந்து 397 திரைத்துறையினருக்கு ஆஸ்கர் அகாடமி குழுவில் சேர அழைப்பு விடப்படுள்ளது. இதில் இந்திய சார்பில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் தென்னிந்தியாவிலிருந்து முதன்முறையாக நடிகர் சூர்யாவிற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா சார்பில் நடிகை கஜோல், இயக்குநர் பிரிவில் இயக்குநர் பான் நலின் என்பவருக்கும், ஆவணப் படங்கள் பிரிவில், ரின்டு தாமஸ் மற்றும் சுஷ்மித் கோஷ் ஆகிய இருவருக்கும், மற்றும் எழுத்தாளர்கள் பிரிவில் ரீமா காக்டி என்பவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் உலகம் முழுவதிலிருந்தும் இயக்குநர்கள், குறும்படம் மற்றும் ஆவணப்பட இயக்குநர்கள், கதாசிரியர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், கலை இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், போன்ற சினிமாவில் பல்வேறு துறை சார்ந்த நபர்கள் அகாடமியில் உறுப்பினர்களாக சேர அழைக்கப்படுவர்.
இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் படங்களில், எந்த படங்களுக்கு விருதுகளை வழங்கலாம் என்பது குறித்து வாக்களிக்கலாம், ஒவ்வொரு துறையிலும் குழு உறுப்பினர்களின் வாக்குகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படும்.
இதையும் படிங்க: பில்கேட்ஸை சந்தித்த மகேஷ்பாபு...!