'பத்ரா', 'துளசி', 'சிம்ஹா', 'லெஜண்ட்', 'சரைனோடு', 'ஜெய ஜானகி நாயக', மற்றும் சமீபத்தில் 'அகண்டா' போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய தென்னிந்திய சினிமாவின் வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவர், போயபத்தி ஸ்ரீனு. அவர் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'அகண்டா' மிகப்பெரிய பிளாக்பஸ்டராக, திரையரங்குகள் மீண்டும் பழைய பொலிவைப் பெற்றது. ரசிகர்களின் ஆராவார வரவேற்பில், திரைத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
போயபத்தி ஸ்ரீனு அடுத்ததாக, உஸ்தாத் ராம் பொதினேனியுடன் இணைந்து தனது அடுத்த பான்-இந்தியன் படத்தைத் தொடங்கியுள்ளார். பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபத்தி ஸ்ரீனுவின் 10ஆவது படமாக இப்படம் உருவாகிறது. இரண்டு அடுத்தடுத்த வெற்றிக்குப் பிறகு, பிரபல தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி Srinivasaa Silver Screens சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். தற்போதைக்கு 'BoyapatiRAPO' என இப்படம் தலைப்பிடப்பட்டுள்ளது. இத்தயாரிப்பு நிறுவனத்திற்கு இது 9ஆவது படம். மேலும் பவண்குமார் இப்படத்தை வழங்குகிறார்.
தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி ஹீரோக்களில் ராம் பொதினேனியும் ஒருவர். அவரது வசீகரம், நளினம் மற்றும் அசத்தல் நடிப்பால், அவர் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார். அவரது டப்பிங் படங்கள் யூ-ட்யூப்பில் பெரும் வரவேற்பைப்பெற்று வருகின்றன. இந்தப் பிரமாண்டமான படம் ராம் பொதினேனியின் 20ஆவது படமாகும் மற்றும் அவர் சமீபத்தில் தான் ‘தி வாரியர்' படப்பிடிப்பை முடித்தார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படம் இன்று (ஜூன் 1) ஹைதராபாத்தில் ‘முஹூர்த்த’ பூஜையுடன் முறைப்படி தொடங்கப்பட்டது.
இப்படம் குறித்து ஸ்ரீனிவாசா சிட்தூரி கூறுகையில்.., "போயபத்தி ஸ்ரீனுவின் இயக்கத்தில் இப்படத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 'தி வாரியர்' படத்திற்குப் பிறகு ராம் பொதினேனியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்கள் பேனரில் வரும் மதிப்புமிக்க படமாக இருக்கும்.
இந்தப் படத்தை நாங்கள் உயர் தொழில்நுட்ப தரத்துடன் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கிறோம். படத்தை தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிட உள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் கதை பஞ்சம்? - ஒரே நடிகரின் படங்களை ரீமேக்கும் இயக்குநர்கள்!