சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மலேசியா சென்றுவிட்டு நேற்று சென்னை திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் மலேசியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்தார். இது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது x பக்கத்தில் ரஜினியுடன் நடந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் ஆசிய அளவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ரஜினிகாந்தை மலேசியா பிரதமர் வரவேற்ற போது மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் சிவாஜி படத்தில் ரஜினி செய்யும் மொட்டை பாஸ் ஸ்டைலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கக்கூடிய படங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
முன்னதாக ஜெயிலர் படத்தின் வெளியீட்டின் போது ரஜினிகாந்த் இமயமலை பயணம் மேற்கொண்டார். பின்னர் உத்தர பிரதேசம் சென்ற ரஜினி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலரை சந்தித்தார். அப்போது யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, யோகிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தில் ரஜினிகாந்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் மலேசியா பிரதமரை சந்தித்து விட்டு நேற்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் ரசிகர் அவரை முத்தமிட முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து 171வது படத்தில் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதையும் படிங்க: மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!