சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 1ஆம் தேதி தனது 70ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையொட்டி, தமிழ்நாட்டிற்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது மத்தியில் ஆளும் பாஜகவை எதிரணியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தோல்வியடைய செய்வதற்கான ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலினின் மனைவியான துர்கா ஸ்டாலின், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் முதலமைச்சரும் தனது கணவருமான மு.க.ஸ்டாலின் நீடுழி வாழவேண்டி 'பீமரத சாந்தி யாகம்' நடத்தி சிறப்பு வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புகைப்படக் கண்காட்சியானது நாளையுடன் நிறைவடைகிறது.
இந்த கண்காட்சியை கமல்ஹாசன் திறந்து வைத்த நிலையில் ஏராளமான திரைப்பிரபலங்கள் இதனை பார்வையிட்டனர். மேலும், ஸ்டாலின் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர். இந்நிலையில் இன்று (மார்ச் 11) தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டார். அங்கிருந்த புகைப்படங்களை பார்த்து தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
![ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்று தொகுப்பு புகைப்படங்களை பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-rajinikanth-stalin-script-7205221_11032023121452_1103f_1678517092_930.jpg)
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது, 'மிகவும் அருமையான கண்காட்சியாக உள்ள இதைப் பார்க்கும்போது முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்க்கை பயணமும், அரசியல் பயணமும் இரண்டல்ல ஒன்றுதான் என்று தெரிவதாக நெகிழ்ச்சியுடன் பேசினார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார் என்றால், அது அவர் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று கூறினார்.
மேலும், மிகவும் அருமையான புகைப்பட கண்காட்சிக்கு அமைச்சர் சேகர்பாபு தன்னை அழைத்துக் கொண்டே இருந்ததாகவும், படப்பிடிப்பினால் வர முடியவில்லை என்றும் அதனால்தான் தற்போது வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய ரஜினிகாந்த், அமைச்சர் சேகர்பாபு மிகவும் விசுவாசமானவர், பண்பானவர், அவருக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் உள்ளது. என் இனிய நண்பர் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயணமும், அரசியல் பயணமும் வெவ்வேறல்ல ஒன்றுதான் என்றார். 54 ஆண்டுகள் அரசு பயணத்தில் இருந்தால் கட்சியில் உழைத்து உழைத்து படிப்படியாக பதவிகளை வகித்து தற்பொழுது முதலமைச்சராக இருக்கிறார் என்று சொன்னால் அது அவரது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்' என்று அவர் தெரிவித்தார்.
![ஸ்டாலின் பற்றி நடிகர் ரஜினிகாந்த் எழுதிய கருத்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-rajinikanth-stalin-script-7205221_11032023121452_1103f_1678517092_823.jpg)
முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின், பதிவேட்டில் Super Collection What a Memory என்று எழுதி கையெழுத்திட்டார். நாளை (மார்ச் 12) இந்த புகைப்படக் கண்காட்சி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சியை ரஜினிகாந்த் உடன் நடிகர் யோகிபாபுவும் பார்வையிட்டார்.
இதையும் படிங்க: "நான் பார்த்துக்கொள்கிறேன்" - தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு ஆறுதல் சொன்ன ரஜினிகாந்த்!