நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. மேலும், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
படத்தில் நடிக்கவிருக்கும் பிற நடிகர்கள் பற்றிய அறிவிப்பும் ஒரு பக்கம் அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படமான ‘Thalaivar 170' குறித்த அப்டேட் ஒன்று திரையுலக வட்டாரங்களில் கசிந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தி ரஜினியின் 170ஆவது திரைப்படமான 'Thalaivar 170' திரைப்படத்தை இயக்கவுள்ளார் எனத் தகவல் கசிந்துள்ளது. ஏற்கெனவே ரஜினியிடம் கதை சொன்ன இயக்குநர்களின் பட்டியலில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இருந்து வந்த நிலையில், தற்போது இப்படி ஒரு தகவல் கசிந்துள்ளது.
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான ‘டான்’ திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து தற்போது ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாரதிராஜா நலமுடன் உள்ளார்... கவிஞர் வைரமுத்து