நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வருகிற ஜூன் 3அன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், இன்று(மே 25) இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘போர் கொண்ட சிங்கம்’ எனும் பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இப்பாடல் படத்தின் மிக உணர்ச்சிமிக்க சூழலில் இடம்பெறும் என்பது இப்பாடல் வரிகளில் இருந்து தெரியவருகிறது. கமல்ஹாசன் படத்தின் ஒரு கட்டத்தில், கையில் குழந்தையுடன், இக்கட்டான சூழலில் பல இழப்புகளைத் தாண்டி எதை செய்வதென்று அறியாத சூழலில் இப்பாடல் தெரியவருகிறது.
ஏற்கெனவே இப்படம் வெறும் ஆக்ஷன் படமாக அல்லாமல் எமோஷனலான ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் வரிகளை விஷ்ணு ஏதவன் எழுதியுள்ளார்.
அனிருத் இசையில் உருக்கமான பாடலாக இணையத்தில் வெளியாகிருக்கும் இப்பாடலின் லிரிக்கல் வீடியோ ரசிகர்கள் மத்தியிலும், சமூக வலைதளத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.