சென்னை: ஃபர்ஹானா (Farhana 2023) திரைப்படத்திற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நெல்சன் வெங்கடேசன் இயக்கிய ஃபர்ஹானா என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இஸ்லாமியராக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் டீஸர் கடந்த மாதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், கடந்த மே 12ஆம் தேதி இப்படம் திரையரங்களில் வெளியானது.
இந்தப் படத்தை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்கள் மற்றும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், 'பர்ஹானா படம் இஸ்லாம் மதத்திற்கு எதிராகவோ அல்லது பிரசாரம் செய்யக்கூடிய வகையிலோ எடுத்த படம் அல்ல. இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும் வகையிலேயே இந்தப் படம் எடுத்துள்ளேன்' என விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுழற்சி முறையில் நான்கு காவலர்கள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டில் பாதுகாப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இன்று காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அன்னையர் தினம் விருது வழங்கும் விழாவில், நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷின் பெயர் இடம் பெற்று இருந்தது. அந்த நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தாய் நாகமணிக்கு விருது வழங்கப்பட்டது. அந்த நிகழ்வில் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஃபர்ஹானா இஸ்லாமியர்களுக்கு எதிரான படமல்ல - தயாரிப்பாளர் எஸ்ஆர்.பிரபு விளக்கம்!