சென்னை: நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்தார். திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் மாணவி நந்தினியைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் விஜய், +2 தேர்வில் மாவட்டங்கள் வாரியாக முதல் மூன்று இடங்களைக் கைப்பற்றிய மாணவ மாணவியரின் பட்டியலை சேகரிக்குமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியரின் பட்டியலை இந்த மாதம் 20ஆம் தேதிக்குள் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும்; அதேபோல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியரின் பட்டியலை இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் ஒப்படைக்குமாறும் நடிகர் விஜய் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவ மாணவியருக்கு தேவைப்படும் மேற்கட்ட படிப்பிற்கான பணத்தொகையையோ அல்லது உதவிகளையோ செய்வதற்காக, இந்தப் பட்டியல் தயார் செய்து வருவதாகவும், இந்த உதவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக இந்தியத் தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததும் அதேபோல் ஒவ்வொரு தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையினை சேகரிக்க படிவம் அனுப்பியிருந்தார்.
அதேபோல் கடந்த வாரம் விலையில்லா விருந்தகம் நடத்தும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பணத்தொகை ஏதேனும் தேவைப்பட்டால் தன்னை அணுகுமாறும் சந்திப்பில் தெரிவித்து இருந்தார். அதேபோல் இரு தினங்களுக்கு முன்பு ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமைதோறும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால், முட்டை போன்றவற்றை முறைப்படி செய்யாத மாவட்டங்கள், முறையாக வழங்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுரை தெரிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவியருக்கு நலத்திட்டங்களை வழங்குவதற்காக நடிகர் விஜய் ஏற்பாடு செய்துள்ளார். தொடர்ந்து இதுபோன்ற செயல்களின் மூலம் தீவிர அரசியலில் இறங்க நடிகர் விஜய் ஆழம் பார்த்து வருவதாகச் சிலர் பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: குஜராத் மாடல் Vs திராவிட மாடல் - பிரதமரை காட்டமாக விமர்சித்த டிகேஎஸ் இளங்கோவன்