லாஸ் ஏஞ்சல்ஸ்(அமெரிக்கா): ஆஸ்கார் விருதுகள் 2023 பரிந்துரைகளுக்கான இறுதிப் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய திரைப்படங்கள் எவை என்பதை காண்போம்.
பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் கீரவாணி இசையில் உருவான ’நாட்டு நாட்டு’ பாடல் இந்த வருடம் ஆஸ்கார் 2023 பரிந்துரைப் பட்டியலில் தேர்வாகியுள்ளது.
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் நடிகர் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த ஆண்டு 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியலில் தேர்வாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆஸ்கார் இறுதிப் பரிந்துரை பட்டியலில் தேர்வான முதல் இந்தியப் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது.
மேலும், ஆஸ்கார் விருதுகளின் இறுதிப்பட்டியல் இன்று(ஜன.24) வெளியானதைத் தொடர்ந்து வருகின்ற மார்ச் 12ஆம் தேதி நடைபெறும் விழாவில் இறுதிப்பட்டியலில் இருந்து ஆஸ்கார் விருதுக்கான படங்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து, இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய ஆவணப்படமான ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் தேர்வாகியுள்ளது. யானைக்கும் யானையைப் பாதுகாக்கும் காவலர்களுக்கு இடையே இருக்கும் பிணைப்பை இப்படத்தில் உருவாக்குகிறது. இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதுக்கான இறுதிப் போட்டியில் ஷௌனக் சென்னின் "ஆல் தட் ப்ரீத்ஸ் என்ற ஆவணப்படம் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் தேர்வாகியுள்ளது.