சென்னை: சித்தார்த் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் 'சித்தா'. இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா இன்று (அக்.05) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சித்தார்த், படத்தின் இயக்குநர் அருண் குமார் மற்றும் சிறப்பு விருந்தினராக இயக்குநர் சசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "எல்லா வகையிலும் 'சித்தா' படம் பாராட்டை பெற்றிருந்தது. செப்டம்பர் 28ஆம் தேதி தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 3 மொழியில் வெளியானது. அன்றைக்கு எந்த ஊரிலும் பந்த் கிடையாது. எந்த பந்த்தும் இல்லாத அன்றைக்கு காசு கொடுத்து ஒரு இடத்தை புக் செய்து, ஒரு தனியார் அரங்கில் செய்தியாளர் சந்திப்பு நடத்தினோம்.
எதுவும் புரியாத அளவுக்கு சிலர் என்ன செய்தார்கள் என்று பார்த்திருப்பீர்கள். பந்த் அன்றைக்கு என் சுயநலத்துக்காக வேலை செய்யப்போனதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. அன்றைக்கு பந்த் கிடையாது. அடுத்த நாள் தான் பந்த். என் வேலையை நிறுத்துவதற்கான ஒரு சரியான காரணமும் யாரிடமும் கிடையாது. எங்கள் தரப்பில் எந்த தவறும் செய்யவில்லை. அதற்கடுத்து இந்த விஷயங்களை பேசாததற்கு காரணம் இது தான்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய நடிகர் சித்தார்த், "என் வாழ்க்கையில் சிறப்பான ஒரு படத்தை எடுத்திருக்கிறேன். அதை பற்றி பேசாமல் வேறு எதையோ கேட்கிறார்கள். அது ரொம்ப வருத்தத்துக்குரிய விஷயமாக சொல்கிறேன். இந்த ஒரு வாரத்தில் அதை பற்றி பேசாமல் இருக்க இது தான் காரணம். இன்றைக்கு நீங்கள் கேட்டதற்காக இதை பற்றி பேசுகிறேன்.
அந்த நிகழ்வின் போது இல்லாத பெரிய மனிதர்கள், பெரிய மனதுடன், பொது வெளியில் மன்னிப்பு கேட்டார்கள். நடிகர் சிவராஜ் குமார் மற்றும் பிரகாஷ் ராஜ் எல்லாம் பெரியவங்க. அவங்க ஊரில் எங்களை அவமதித்தது பிடிக்கவில்லை என்று எனக்கு ஆதரவளிக்கும் வகையில் மன்னிப்பு கேட்டார்கள்" என்று கூறினார்.
மேலும், "அவர்கள் எனக்கு ஆதரவு தந்தது, பெரிய விஷயமாக பார்க்கிறேன், நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகர் சிவராஜ் குமார் இருவரும் மன்னிப்பு கேட்க தேவையே இல்லை. இருப்பினும் அவர்கள் எனக்காக மன்னிப்பு கேட்டார்கள். அந்த பெரிய மனதுக்கு நன்றி சொல்கிறேன்" என தெரிவித்தார்.
முக்கியமான விஷயம் என்று பேசிய சித்தார்த், "சிவான்னா நீங்க எவ்வளவு பெரிய ஆளு. உங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. நாமெல்லாம் ஒரே நதி தண்ணீரில் தானே குளிக்கிறோம். அதில் எந்தவிதமான பிரச்சினையும் பார்க்கவில்லை. எல்லாரும் ஒன்று தான். அதிலிருக்கும் அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. அதை பற்றி நான் பேசியது கிடையாது. திடீரென அதை பற்றி பேசுவேன் என்று பார்க்கவில்லை.
இது திரும்ப எந்த தயாரிப்பாளருக்கும் நடக்க கூடாது. என் படத்தின் ரிலீஸ் ஒட்டித்தான் படத்துக்கு புரொமோஷன் பண்ண முடியும். அன்றைக்கு வந்து, இவ்ளோ முக்கியமான பிரச்சினை நடக்கிறது. 'நீ ஏன் உன் வேலையை பண்றன்னு' கேட்டா ஒரு தயாரிப்பாளராக நான் என்ன பதில் சொல்வது.
கன்னட படம் பார்க்கும் மக்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. கண்ணு பட்டதா என்று தெரியவில்லை, அன்று அதுபோன்ற சம்பவம் நடந்து விட்டது. எனக்கு என் படம் தான் முக்கியம். சித்தா படத்தை எல்லாரும் கொண்டாடுகிறார்கள். இன்னும் இரண்டு வாரம் படம் தியேட்டரில் ஓடப்போகிறது" என்று நடிகர் சித்தார்த் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.