ஹைதராபாத்: தமிழ் சினிமாவில் இதிகாச கதையான ராமாயணத்தை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் வெளிவந்துள்ளன. இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து "ஆதிபுருஷ்" என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
இதில், ராமராக பிரபாசும், சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக சயீப் அலிகானும் நடித்துள்ளனர். சுமார் 700 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் வரும் 16ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், ஆதிபுருஷ் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் ராமாயணக் கதையை மையமாகக் கொண்டு மற்றொரு திரைப்படம் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை "தங்கல்" பட இயக்குனர் நிதேஷ் திவாரி பிரம்மாண்டமாக இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதில், ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக ஆலியா பட்டும் நடக்கவுள்ளதாக பேசப்படுகிறது. அதேபோல் ராவணன் கதாபாத்திரத்திற்கு நடிகர் யாஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரிகிறது. கணவன் மனைவியான ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் ராமர் - சீதையாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: காதலரை கரம் பிடித்த நடிகை சோனாலி செய்கல்; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
இப்படத்தில் சீதை கதாபாத்திரத்திற்கு முதலில் ஆலியா பட்டை இயக்குனர் தேர்வு செய்ததாகவும், அப்போது கால்ஷீட் பிரச்சினை இருந்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டதாகவும் தெரிகிறது. பல்வேறு காரணங்களால் இப்படம் தொடங்க மிகவும் தாமதமானதால், இப்போது மீண்டும் ஆலியா பட்டை சீதை கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.
சீதை கதாபாத்திரத்தில் அதுவும் கணவருடன் இணைந்து நடிக்கவிருப்பதால் நடிகை ஆலியா பட் மிகவும் உற்சாகமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என தெரிகிறது. இந்த ஆண்டு டிசம்பரில் இப்படம் திரைக்கு வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு அயன் முகர்ஜி இயக்கத்தில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படத்தில், ஆலியா பட்டும் ரன்பீர் கபூரும் இணைந்து நடித்திருந்தனர். ஆலியா பட் ஏற்கனவே, 'ஹார்ட் ஆஃப் ஸ்டோன்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. அதேபோல், கரண் ஜோகர் இயக்கத்தில் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' என்ற படத்தில் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெரிய ஹீரோக்களுக்கான ஃபார்முலாவில் என்னால் கதை பண்ண முடியாது: பிரபல இயக்குநர்!