சென்னை: தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது. அதில் சிறிய பட்ஜெட் படங்கள்தான் அதிகம் வெளியாகிறது. கடந்த வாரம் மூன்று படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் மட்டும் சுமார் 9 படங்கள் வெளியாகி உள்ளன.
த்ரிஷா நடித்துள்ள தி ரோடு (the road), விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம், விக்ரம் பிரபுவின் இறுகப்பற்று, மதுர் மிட்டலின் 800, அருணாசலம் வைத்தியநாதனின் சாட் பூட் த்ரீ, வனிதா விஜயகுமாரின் தில்லு இருந்தா போராடு, ஆடுகளம் நரேன் நடித்துள்ள இந்த க்ரைம் தப்பில்ல, எனக்கு என்டே கிடையாது மற்றும் என் இனிய தனிமையே ஆகிய படங்கள் இன்று வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் த்ரிஷா முதன்மை பாத்திரத்திலும், டான்சிங் ரோஸ் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கும் திரைப்படம் 'தி ரோட்'. இப்படத்திற்கு சாம்.C.S இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ரத்தம் படமும் இன்று வெளியானது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார்.
விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்னதி, ஸ்ரீ மற்றும் சானியா உள்ளிட்ட நடிகர்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம், இறுகப்பற்று. எலி, தெனாலிராமன் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான இந்த படமும் இன்று வெளியாகி இருக்கிறது. சிறப்பு காட்சியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி உள்ள ‘800’ படமும் இன்று வெளியாகியுள்ளது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாகவும், மஹிமா நம்பியார் மதிமலராகவும் நடித்துள்ளனர். இயக்குநர் ஸ்ரீபதி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் 9 படங்கள் வெளியாகி உள்ளன. இதில் பெரும்பாலான படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "எதற்கெடுத்தாலும் ஏன் நடிகர்களை இழுக்கிறீர்கள்?" - காவிரி விவகாரத்தில் இயக்குநர் பேரரசு கேள்வி