ஒரு காலத்தில் தமிழ் சினிமாவைப்பொறுத்தவரையில் ஒரு படம் வெற்றிபெற நல்ல கதை எல்லாம் தேவையில்லை. ரசிகர்களைத் திருப்திப்படுத்தினால் மட்டும் போதும். ஆனால், முன்னணி நடிகர்களுக்கு அந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது. ஏனென்றால், தனது ஆஸ்தான நடிகரின் படத்தை எப்படியும் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடக்கூடிய ஏராளமான ரசிகர்களின் பட்டாளம் இருந்தனர்.
அதுமட்டுமின்றி அப்போதெல்லாம் இத்தனை காட்சிகள் இருக்காது. இவ்வளவு திரையரங்குகளில் வெளியாகாது. அதனால் 50 நாள்கள், 100 நாள்கள், 150 நாள்கள், 200 நாள்கள் என ஓடிய படங்கள் இங்கு ஏராளம்.
![கமல், அருண் விஜய், விக்ரமை தொடர்ந்து தற்போது ஆர்யா! - தமிழ் சினிமாவில் புதிய அலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-tamil-cinema-heros-script-spl-7205221_04092022151714_0409f_1662284834_353.jpg)
எனவே, படத்தை விளம்பரப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லாமல் இருந்தது. குறைந்தபட்சம் பேப்பரில் போட்டால் போதும் என்ற அளவே இருந்தது, அன்றைய விளம்பரங்கள். ஆனால், இன்று அப்படியல்ல ஒரு படத்தை எடுப்பதைவிட அதனை ரிலீஸ் செய்வது மிகப்பெரிய வேலையாக இருக்கிறது. அதுவும் இந்த கரோனா தாக்கத்திற்குப் பிறகு முன்னணி நடிகர்களின் படங்களே இங்கு மூச்சுமுட்டுகின்றன.
![கமல், அருண் விஜய், விக்ரமை தொடர்ந்து தற்போது ஆர்யா! - தமிழ் சினிமாவில் புதிய அலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-tamil-cinema-heros-script-spl-7205221_04092022151714_0409f_1662284834_832.jpg)
இரண்டுஆண்டு கரோனா காலகட்டத்தில் ஓடிடியின் வரவுகளால் ஏராளமான மாற்று மொழிப் படங்களை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு சினிமா குறித்த பார்வையும் ரசனையும் கொஞ்சம் வளர்ந்துவிட்டதாகவே தோன்றுகின்றது. என்னதான் தனது ஆதர்ச நடிகராக இருந்தாலும் கதை சரியில்லை என்றால், விமர்சிக்கத் தவறுவதில்லை. இதற்கு அண்ணாத்த, வலிமை, எதற்கும் துணிந்தவன், கோப்ரா போன்ற படங்களின் தோல்வியே சமீபத்திய உதாரணங்கள்.
![கமல், அருண் விஜய், விக்ரமை தொடர்ந்து தற்போது ஆர்யா! - தமிழ் சினிமாவில் புதிய அலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-tamil-cinema-heros-script-spl-7205221_04092022151714_0409f_1662284834_161.jpg)
அதுவும் டிஜிட்டல் மீடியா வளர்ச்சியால் ஒரு படம் வெளியான முதல் காட்சியிலேயே அப்படத்தின் தலையெழுத்து எழுதப்பட்டு விடுகிறது. யூ-ட்யூப் யுகத்தில் எந்த நடிகரும் தப்பிப்பதில்லை. காலை 5 மணி காட்சிகள் முடிந்து வெளிவரும் ரசிகன் சொல்லும் வார்த்தை தான் அப்படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. இதனால் இன்னும் நாயக பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்கும் கமர்ஷியல் படங்களை, இங்கு எடுத்து யாரும் காலம் தள்ள முடியாது.
![கமல், அருண் விஜய், விக்ரமை தொடர்ந்து தற்போது ஆர்யா! - தமிழ் சினிமாவில் புதிய அலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-tamil-cinema-heros-script-spl-7205221_04092022151714_0409f_1662284834_514.jpg)
அதுவே, படம் நன்றாக இருந்தால் அதனைக்கொண்டாடவும் தவறுவதில்லை. இதற்கு சமீபத்திய உதாரணங்கள் விக்ரம் மற்றும் திருச்சிற்றம்பலம். பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் அதனை சொன்ன விதத்தில் திருச்சிற்றம்பலம் வெற்றிபெற்றது. ஆனால், கமலின் விக்ரம் படம் அப்படியல்ல. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்கு கதை, திரைக்கதையைத் தாண்டி விளம்பரமும் ஒன்று. இப்படத்திற்காக கமல்ஹாசன் உலகம் முழுவதும் பயணம் செய்தார். கிடைக்கின்ற எல்லாவற்றையும் விக்ரமை விளம்பரப்படுத்தவே பயன்படுத்திக்கொண்டார்.
![கமல், அருண் விஜய், விக்ரமை தொடர்ந்து தற்போது ஆர்யா! - தமிழ் சினிமாவில் புதிய அலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-tamil-cinema-heros-script-spl-7205221_04092022151714_0409f_1662284834_422.jpg)
தமிழ்நாட்டில் கமல் செல்லாத ஊரே இல்லை எனலாம். கிட்டத்தட்ட அனைத்து ஊர்களுக்கும் சென்று விக்ரமை விற்பனை செய்தார். தேர்தல் பிரசாரத்திற்கு இத்தனை ஊர்களுக்குச் சென்றாரா எனத்தெரியவில்லை. அதுமட்டுமின்றி கொச்சின், ஹைதராபாத், பெங்களூரு, மும்பை என்று இந்தியா முழுவதும் பயணித்தார். பான் இந்தியா படம் என்றால் அதனை எந்த அளவு விளம்பரப்படுத்த வேண்டும் என்பதைப் பாடம் எடுத்தார்.
உலகளவில் கமல் செய்த விளம்பரங்களால் விக்ரம் படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் இன்று வரை வசூலித்துள்ளது. கமலைப் பார்த்து மற்ற மொழி நடிகர்களும் தங்களது படங்களை விளம்பரப்படுத்த எல்லைதாண்டி வரத்தொடங்கினர். ஆனால், அந்த படங்கள் எல்லாம் மண்ணைக் கவ்வியது தனிக்கதை. ஆனால் தமிழ் சினிமாவில் விக்ரமின் வெற்றி, புரொமோஷனில் புதியதொரு அலையை உருவாக்கியுள்ளது.
தமிழ் சினிமா என்றால் சென்னை மட்டுமே என்று இருந்த தமிழ் சினிமா நாயகர்களை தென் தமிழ்நாடு நோக்கி பார்வையை திருப்பியது, விக்ரமின் வெற்றி. அதன்பயனாக இன்று தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர், நடிகர்கள். இது ஆரோக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வெளியான படம் 'யானை'.
இப்படத்திற்காக அருண் விஜய், இயக்குநர் ஹரி உள்ளிட்டோர் தமிழ்நாடு முழுவதும் சென்று ரசிகர்களை சந்தித்தனர். மதுரை, கோவை, திருச்சி எனப் பல ஊர்களுக்கு சென்று படத்தை விளம்பரப்படுத்தினர். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. வழக்கமாக, ஒரு படம் வெளியாகிறது என்றால் அது தொடர்பான பிரஸ் மீட், ஆடியோ வெளியீட்டு விழா எல்லாம் சென்னையிலேயே பிரமாண்டமாக நடத்தப்படும்.
இதனால் மற்ற ஊர்களில் இருக்கும் ரசிகர்கள் எல்லாம் தனக்கு பிடித்த நடிகர், நடிகையர்களை நேரில் பார்த்து ரசிக்க முடியாத நிலையில் இருந்தனர். எப்போதாவது ஒருசில நிகழ்ச்சிகள் நடக்கும். அதுவும் டிக்கெட் கொடுத்து பார்க்க வேண்டியதாக இருக்கும். இந்நிலையில் இதுபோன்று தனது படத்திற்காக நடிகர்கள் மற்ற ஊர்களுக்கு சென்று ரசிகர்களை சந்திக்கும்போது ரசிகர்களுக்கும் இது நல்லதொரு புது அனுபவத்தைத் தரும்.
படத்திற்கு விளம்பரமாகவும் அமையும். இதே போல்தான் சமீபத்தில் வெளியான 'கோப்ரா' படத்திற்காக நடிகர் விக்ரம் உள்ளிட்டோர் படக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சென்று திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்தித்தனர். அதுமட்டுமின்றி கொச்சின், ஹைதராபாத், பெங்களூருவுக்கும் விக்ரம் பயணித்தார். தமிழ்நாட்டில், மதுரை, கோவை போன்ற ஊர்களில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பும் அன்பும் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியை கொடுத்தாக விக்ரம் தெரிவித்தார்.
சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் கேப்டன். இப்படத்திற்காக நடிகர் ஆர்யா தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றி வருகிறார். இப்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் தான் நடித்த படத்தை விளம்பரப்படுத்த இப்படி இறங்கியிருப்பது தயாரிப்பாளர்களுக்கு சற்று மகிழ்ச்சியைத் தரலாம். வரவேற்கத்தக்க ஒன்று. கரோனா தாக்கத்திற்குப் பிறகு திரையரங்குகளில் சென்று படம் பார்ப்பதையே மக்கள் மறந்துவிட்ட சூழலில் நடிகர்களின் இந்த முடிவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.