சென்னை: இயக்குநர் நெல்சன் திலீப்குமார், ’கோலாமாவு கோகிலா’, ’டாக்டர்’, ’பீஸ்ட்’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களில் மிக முக்கியமான இயக்குநராகத் திகழ்ந்து வருகிறார். அவர் இயக்கி, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் ரசிகர்கள், மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனையடுத்து, நடிகர் விஜயை இயக்கும் வாய்ப்பு இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்தது. இப்படிப்பட்ட மாறுபட்ட கூட்டணியின் திரைப்படத்தை காண ரசிகர்கள் மற்றுமின்றி பொதுமக்களும் பெரும் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில்,பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் நெல்சன், விஜய் கூட்டணியில் வெளியான ’பீஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களைப் பெரிதாக திருப்திப்படுத்தவில்லை.
மேலும், இதற்குக் காரணம் நெல்சனின் பலவீனமான திரைக்கதை தான் என்று விமர்சகர்கள் பெரும்வாரியாக நெல்சனை சாடினர். இந்நிலையில், ’பீஸ்ட்’ திரைப்படத்தை சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். அவருக்கும் இந்தப்படம் பெரிதாக சோபிக்கவில்லையென்றும், ‘ஐஸ்கிரீம் கூட நல்லா இருக்குது..!” என நக்கலாக கமெண்ட் அடித்தார் என்றும் தகவல்கள் கசிந்தன.
இதனையடுத்து, ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படமான ‘Thalaivar 169'-ஐ இயக்குநர் நெல்சன் இயக்குவது கேள்விக்குறியானது.
சினிமா வட்டாரங்களில் பலரும், நெல்சன் அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று பேசி வந்த நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஒருவழியாக மௌனம் கலைத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் தான் இயக்கிய, மற்றும் இயக்கவிருக்கும் படங்களின் வரிசையில் '#Thalaivar169' என்று ரஜினியின் அடுத்த படத்தையும் சேர்த்துள்ளார்.
இதன் மூலம் ரஜினியின் அடுத்த படத்தில் தன் இருப்பை நெல்சன் உறுதிசெய்துள்ளார். இதனையடுத்து, நெல்சனின் இந்த ட்விட்டர் பக்கத்தின் மாற்றம் ரசிகர்கள் மற்றும் சமூகவலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இசைஞானிக்கு வேறுஞானம் இல்லை - ராஜ்கிரண் கருத்து