நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'O2' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, யூ-ட்யூப் புகழ் ரித்விக், இயக்குநர் விக்னேஷ், இயக்குநர் பரத் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழா மேடையில் பேசிய எஸ்.ஆர்.பிரபு, 'இயக்குநர் விக்னேஷ் இந்தக் கதையை கொண்டு வந்ததும் இதில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என முடிவு செய்திருந்தார். இந்த வாரத்தில் அவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளது. எங்கள் படக்குழு சார்பில் அவர்களுக்கு வாழ்த்துகள். திரையரங்கில் இந்தப் படம் வந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
கரோனா காரணமாக, ஓடிடிக்கு இந்தப் படத்தைக் கொடுப்பதாக முன்பே முடிவு செய்துவிட்டோம். தமிழ்நாடு கடந்து மற்ற மாநிலங்களிலும் ரசிகர்களைக் கவரும் என நம்புகிறோம். கரோனா காலத்தில் ஆக்சிஜன் தேவை என்பது அதிகமாக இருந்தது. அதை வைத்து தான் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ’O2’ இதுவரை வந்த படங்களில் வித்தியாசமான படமாக இருக்கும்.
கே 13 படத்தின் இயக்குநரும் நடிகருமான பரத் பேசுகையில், “நயன்தாராவுக்கு ஒரு கதை உருவாக்கியிருந்தேன். ஆனால் எனக்கு அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு இயக்குநர் விக்னேஷ் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தொழில்நுட்பமாக இந்தப் படத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். இயக்குநராக இருந்ததை விட நடிக்கும்போது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்” எனப் பேசினார்.
நடிகர் ரித்விக் பேசுகையில், ”அனைவருக்கும் நன்றி. என்னுடைய முதல் படம் ’O2’ எல்லோரும் பாருங்க. மீடியா சம்பந்தமாக நான் ஒரு வீடியோவில் நடித்தேன். அந்த வீடியோ பெரிய வைரல் ஆனது. அதைப் பார்த்து எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது” எனப் பேசினார்.