சென்னை: இயக்குனர் சுதீப்டோ சென் இயக்கியுள்ள “தி கேரளா ஸ்டோரி” என்ற இந்தி திரைப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ மத பெண்கள் இஸ்லாமிற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு பிறகு, தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இப்படம் கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தைத் தூண்டும் விதமாக உள்ளது என்றும், சங் பரிவாரின் கொள்கையை பிரசாரம் செய்வதற்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார். கேரளாவில் அரசியலில் ஆதாயம் அடைவதற்காகவே சங் பரிவார் அமைப்புகள் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும் இப்படத்திற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் மே 5ஆம் தேதி நாடு முழுவதும் வெளியானது. தமிழகத்தில் இந்தி மொழியில் சில திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஆனால் திரைப்படம் வெளியான இடங்களில் முஸ்லிம் அமைப்பினர் பல்வேறு விதமான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சென்னையில், அண்ணாநகர் வி.ஆர். மால், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, விருகம்பாக்கம் ஐநாக்ஸ், வேளச்சேரி பி.வி.ஆர். உள்ளிட்ட 13 திரையரங்குகளில் தி கேரளா ஸ்டோரி படம் வெளியான இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடுவதை நிறுத்துவதாக மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்துள்ளன.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் படத்திற்கான வரவேற்பு இல்லாததால் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இன்று முதல் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் நேற்று மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில் இன்று முதல் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் டிக்கெட் முறையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "ஒரு விருது கூட கொடுக்கல" 'க/பெ ரணசிங்கம்' குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை!