ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த இலியானா, கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான 'கேடி' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பின்னர், நடிகர் விஜய் உடன் 'நண்பன்' படத்தில் நடித்தார். நண்பன் படம் பெரிய அளவில் வெற்றியடைந்தபோதும், இலியானாவுக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து பாலிவுட்டிற்கு சென்றுவிட்டார். அடுத்தடுத்து பல இந்தி படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
நடிகை இலியானா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக பேசப்பட்ட நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பின் சகோதரர் செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேலை இலியானா காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இது தொடர்பாக இலியானா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தனது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் நடிகை இலியானா அறிவித்தார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். திருமணம் ஆகாமலேயே கருவுற்றிருப்பதாக கூறியதால், இலியானாவின் கணவர் யார்? காதலன் யார்? என்று நெட்டிசன்கள் வரிசையாக கேள்வி எழுப்பினர். ஆனால், இலியானா தனது காதலன் குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால், தனது கர்ப்பகாலம் தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இதையடுத்து கடந்த மாதம் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை கருப்பு வெள்ளையாக பகிர்ந்திருந்தார். அதிலும் அவரது காதலன் முகம் முழுமையாக தெரியவில்லை.
இந்த நிலையில், நடிகை இலியானா முதல் முறையாக தனது காதலனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இலியானா இன்று(ஜூலை 17) தனது இஸ்டாகிராம் ஸ்டோரியில் 'டேட் நைட்' என்று குறிப்பிட்டு மூன்று புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை பதிவிட்டுள்ளார். அதில், இலியானா நபர் ஒருவருடன் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் அந்த நபரின் பெயரை, அவர் குறித்த விபரங்களையோ இலியானா வெளியிடவில்லை. ஆனால், இந்த புகைப்படத்திலிருந்து கத்ரீனா கைஃப்பின் சகோதரர் செபாஸ்டியன் இலியானாவின் காதலன் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
இதையும் படிங்க: எனது குழந்தையின் இதயத்துடிப்பை கேட்ட அந்த தருணம்.. இலியானா நெகிழ்ச்சி பதிவு