பல தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாகவும், இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான ’வாய்தா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ள ஆந்திராவைச் சேர்ந்த பவுலின் தீபா சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூ பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
தீபா கடந்த சில ஆண்டுகளாக இயக்குநரும், தயாரிப்பாளருமான சிராஜுதீன் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி இரவு நடிகை தீபா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஒரு நபரை உயிருக்கு உயிராக காதலித்த நிலையில், காதல் கைகூடாததால் தற்கொலை செய்துகொள்வதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை எனவும் கடிதம் எழுதி வைத்து நடிகை தீபா தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொள்வதற்கு முந்தைய நாள் நடிகை தீபா வெளியே சென்றுவிட்டு ஆட்டோவில் திரும்பி வந்து சோர்வாக வீட்டிற்கு நடந்து செல்வது மற்றும் நடிகை தீபா தற்கொலை செய்துகொண்ட பின் அவரது வீட்டிற்கு, அவரது காதலன் சிராஜுதீனின் நண்பர் பிரபாகரன் முதல் முதலில் வந்ததுமான இரு சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
காணமல் போன செல்போன்: இச்சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே நடிகையின் உடலை பிரேதப் பரிசோதனை முடிந்து பெற்றுச் செல்ல வந்தபோது, நடிகை பவுலினின் சகோதரர் ராஜேஷ் தீபா 3 செல்போன்களை பயன்படுத்தி வந்த நிலையில், அவரது ஐ-போன் ஒன்று காணாமல் போயுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை தீபா தற்கொலை செய்துகொண்டதை அறிந்து முதன்முதலில் அவரது வீட்டிற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றவரும், காவல் துறையினருக்கு தகவல் அளித்தவருமான சிராஜுதீனின் நண்பர், பிரபாகரன் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் நடிகை தீபா மற்றும் சிராஜுதீன் காதலித்து வந்தது உறுதியானது.
மேலும், நடிகை தற்கொலை தொடர்பாக சிராஜுதீன் தெரிவித்த தகவலின் அடிப்படையில் தான் தீபா வீட்டிற்கு தான் வந்ததும் விசாரணையில் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கதவை உடைத்து முதலில் உள்ளே சென்றது பிரபாகரன் என்பதால் காணாமல் போனதாக சொல்லப்படும் நடிகை தீபாவின் ஐ-போன் தொடர்பாகவும் பிரபாகரனிடம் கோயம்பேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
தற்கொலைக்கு காரணம் என்ன?: அப்போது சிராஜுதின் காதலியான பவுலினுக்கு ஐபோன் வாங்கி கொடுத்ததாகவும், பின்னர் சிராஜுதின் மற்றும் தீபா இடையே ஏற்பட்ட மோதலின் போது, பவுலினிடம் இருந்த ஐபோனை சிராஜுதின் பெற்று வருமாறு கூறியதால் சில நாட்களுக்கு முன்பே தான் பவுலினிடமிருந்து பெற்று வந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை பவுலினின் கைப்பற்றப்பட்ட 3 செல்போன்களையும் சைபர் ஆய்வகத்திற்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளதாகவும், அதில் கிடைக்கக்கூடிய ஆவணங்களை வைத்து நடிகையின் காதலனான சிராஜுதினிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகையின் காதலன் சிராஜுதீன் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவந்துள்ளதால், அவர் சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகையை காதலித்துள்ளாரா? அல்லது நடிகையை மறு திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினாரா? போனற பல சந்தேகங்கள் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை - "குழலி" பட இயக்குனர் கண்ணீர்