ஆரம்ப கால சினிமாவில் கனமான குரல் வளம் கொண்ட பாடகர்கள் தான் அதிகம் இருந்தார்கள். அவர்களை முன்னிலைப்படுத்தியே அந்த கால திரையிசை உலகம் இயங்கி வந்தது. அதன் பிறகு எழுபதுகளில் ரஜினி, கமல் போன்றவர்களின் வருகையால் திரையுலகம் மென்மையான குரல்வளம் கொண்டவர்களால் நிறைந்திருந்தது.
அந்த சமயத்தில் அவர்களைப் போன்ற இளைய தலைமுறையின் துள்ளல், துடிப்பு, உற்சாகத்தைப் பிரதிபலிக்க எஸ்.பி.பி. என்ற பிதாமகன் கிடைத்தார். அதே போன்று எந்தவொரு ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நதியோட்டமாக மனதை வருட ஒரு ஜேசுதாஸ் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த இருவரும் தங்களது ஆளுமையால் திரையிசையை ஆண்டு வந்த சமயத்தில் கேரள தேசத்தில் இருந்து ஒரு மயக்கும் குரல் வந்தது. அந்த குரல் தமிழ் ரசிகர்களை மயக்கி கட்டிப்போட்டது. அந்த குரலுக்குச் சொந்தக்காரர்தான் பளியத்து ஜெயச்சந்திரக்குட்டன் என்ற பி. ஜெயச்சந்திரன்.
‘கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…’, ‘வசந்த காலங்கள்… இசைந்து பாடுங்கள்…’, ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…’, ‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே...’, ‘மாஞ்சோலை கிளிதானோ...’, ‘கொடியிலே மல்லிகைப்பூ...', 'என் மேல் விழுந்த மழைத்துளியே...', 'கட்டாளம் காட்டுவழி...' உட்பட மனதை ரம்மியமாக்கும் பாடல்களைப் பாடியவர். தமிழ், மலையாளம் உட்படப் பல்வேறு மொழிகளில் 15ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை செய்தவர், ஜெயச்சந்திரன்.
துல்லியமான உச்சரிப்பு, பொருளுணர்ந்து பாவ நயத்தோடு குரலால் மெருகூட்டுவது ஆகியவற்றில் தனித்தன்மையோடு பிரகாசித்தார், ஜெயச்சந்திரன். பி. சுசீலாவுடன் பாடிய 'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்' (‘நானே ராஜா நானே மந்திரி’) பாடலுக்கு மயங்காதவர் யாருமே இல்லை. மனோஜ் கியான் இசையில் ‘இணைந்த கைகள்’ படத்தில் ‘அந்தி நேரத் தென்றல் காற்று' என்ற பாடலை எஸ்.பி.பி.யுடன் சேர்ந்து பாடியிருந்தார்.
விக்ரமனின் ‘பூவே உனக்காக’ படத்தில் எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசையில் சுஜாதாவுடன் பாடிய ‘சொல்லாமலே யார் பார்த்தது’ பாடலில் ஜெய் சேட்டனின் குரல் வசீகரம் சொல்லாமலே எல்லோருக்கும் புரிந்தது. மேலும் 'கிழக்குச் சீமையிலே' படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் இவர் பாடிய 'கட்டாளம் காட்டுவழி' பாட்டுக்கு தமிழக அரசின் விருது பெற்றார்.
அது மட்டுமின்றி தமிழ்த்திரையுலகில் இவர் செய்த சேவையைப் பாராட்டி 1997ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது. மலையாளத்திலும் நிறைய விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் மலையாள சினிமாவில் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தி படத்திலும் பாடியுள்ளார்.
தமிழில் இரண்டு முறை தமிழ்நாடு ஸ்டேட் விருது, மலையாள சினிமாவில் உயரிய விருதான ஜே.சி.டேனியல் விருது, கேரள அரசின் விருது, தேசிய விருது எனப் பல்வேறு விருதுகளைப் பெற்று விருதுக்கே பெருமை சேர்த்துள்ளார். ஜெயச்சந்திரன் பள்ளியில் படித்த காலத்திலேயே மிருதங்கம் வாசிப்பதில் வல்லவராக இருந்துள்ளார். மேலும் பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.
இளையராஜா இசையில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். அந்த பாடல்கள் எல்லாம் இப்போதும் எல்லோரது விருப்பப் பட்டியலில் உள்ள பாடல்களாக இருக்கின்றன. எஸ்.பிபி.; ஜேசுதாஸ் திரையிசையில் கோலோச்சிய காலத்திலேயே தன்னுடைய வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று.
இதையும் படிங்க: "தமிழில் பட வாய்ப்புகளே இல்லை" - வித்யாசாகர் உருக்கம்