சென்னை: தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார் மன்சூர் அலிகான். விஜயகாந்த நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் வீரபத்ரனாக மிரட்டியிருப்பார். அதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில், வில்லன் வேடங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனியிடம் பிடித்தார். இவரது வில்லத்தனங்கள் இன்று வரை ரசிக்கக்கூடியவை.
இவர் சினிமா வளர்ச்சி காரணமாக நகைச்சுவை வில்லனாக மாறிவிட்டார். இவரை திரையில் பார்த்து பயந்தவர்கள் எல்லாம் தற்போது காமெடியனாக பார்த்து ரசிக்கின்றனர். இவர் சினிமா தவிர்த்து நிஜ வாழ்வில் தன்மையான மனதுக்காரர். சமூக சிந்தனை உள்ளவர். சமூகம் சார்ந்த கருத்துக்களை சமரசம் இன்றி பேசக்கூடியவர். கரோனா தடுப்பூசி குறித்து இவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை உண்டு பண்ணின.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் மன்சூர் அலிகான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே, கைதி திரைப்படம் மன்சூர் அலிகானுக்காக எழுதிய கதை என்று லோகேஷ் கனகராஜ் சொல்லிருந்தார். அதோடு அவரது ரசிகன் நான் என்றும் தெரிவித்திருந்தார். இதனால் லியோ படத்தில் நிச்சயம் பேன் பாய் சம்பவம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில் மன்சூர் அலிகான் இன்று (பிப்.21) தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் நடித்து வரும் சரக்கு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடி உள்ளார். எப்போதும் வித்தியாசமாகவும், வியப்பாகவும் நடந்துகொள்ளும் மன்சூர் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துவரும் படம் "சரக்கு". இந்த படத்தில் மன்சூர் அலிகானுக்கு ஜோடியாக வலினா நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், சேசு, கென்ஸ்லி, யோகி பாலா மற்றும் எழுபதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள். சரக்கு திரைப்படத்தை ஜே.ஜெயக்குமார் இயக்குகிறார்.
அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய சித்தார்த் விபின் இசை அமைக்கிறார்.Conclusion:இயற்கை விவசாயம் குறித்து அடிக்கடி பேசிவரும் நடிகர் மன்சூர் அலிகான் தனது பிறந்தநாளை பலாப்பழம் வெட்டி கொண்டாடிய நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட 'பார்டர்' திரைப்படம்!