சென்னை: தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு உள்ள முக்கியத்துவம் மற்ற மொழிகளில் இருக்கிறதா என்றால் அரிதுதான். நமது வாழ்வில் காலை முதல் இரவு உறங்கச் செல்வது வரை நமக்கு ஆறுதலாகவும், வழித்துணையாகவும் உடன் வருவது இசைதான் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக சினிமா பாடல்கள். இன்றைய காலத்தில் நமது பாடல்கள் மொழி கடந்து ரசிக்கப்படுகின்றன. இதற்குக் காரணமான இசை அமைப்பாளர்களும் புகழ் பெறுகின்றனர்.
ஆனால் தமிழ்நாட்டில் பாடல்களையும், இசையமைப்பாளரையும் கொண்டாடும் அதே நேரத்தில் பாடலை எழுதிய பாடலாசிரியர்களைக் கொண்டாடப்படுவதில்லை என்பதே உண்மை. ஆரம்பக் காலத்தில் கண்ணதாசன், வாலி, அதனைத் தொடர்ந்து வைரமுத்து, நா.முத்துக்குமார் என ஒரு சில ஆளுமைகளே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். ஆனால் அற்புதமான வரிகளால் அழகான பாடல்களைக் கொடுத்த பாடலாசிரியர்கள் யாருக்கும் தெரியாமல் தனக்கான அங்கீகாரத்தைப் பெற முடியாமல் இன்னும் இங்கு இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
தற்போது நமது விருப்பப் பட்டியலில் இருக்கும் பாடலை எழுதியவர் யார் என்று நாம்மில் யாரும் தேடிப்போய் பார்ப்பதும் குறைவு தான். அப்படி சமீபத்தில் எத்தனையோ அருமையான பாடல்களை எழுதிய பாடலாசிரியர் தான் முத்தமிழ். இதுவரை கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
'டசக்கு டசக்கு' என விக்ரம் வேதாவில் ரகளையான பாடல்களை எழுதியவர். அவரே இறுதிச் சுற்றுப் படத்தில் 'வா மச்சானே' என்று ஆட்டம் போட வைத்தார். முண்டாசுப்பட்டி படத்தில் அனைத்து பாடலுமே நன்றாக இருக்கும். வாயை மூடி பேசவும் படத்தில் 'காதல் அற ஒன்னு' பாட்டு கேட்டால் புதுவித உற்சாகம் பிறக்கும். தமிழ்ப் படங்கள் தவிர்த்து தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகும் மொழி மாற்றுப் படங்களுக்கும் பாட்டு எழுதியுள்ளார் முத்தமிழ்.
அதாவது அமீர் கானின் லால் சிங் சத்தா, சார்லி 777, சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் தசரா படத்தில் இவர் எழுதிய பாட்டு தான் தற்போதைய இன்ஸ்டா வைரல். "மைனரு வேட்டி கட்டி" என்ற இந்த பாட்டு இன்ஸ்டா ரீல்ஸ் ஆக சக்கைப்போடு போட்டு வருகிறது. பாடல் எழுதுவது மட்டுமின்றி இந்த பாடலை பாடியும் உள்ளார். மேலும் இவர் சியான்கள் என்ற படத்துக்கு இசையும் அமைத்துள்ளார்.
இவரைப் போலவே உள்ள பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா. விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் வந்த லைஃப் ஆஃப் ராம் பாடலுக்காக எல்லோராலும் பாராட்டப்படுபவர். இது போல் இன்னும் சில பாடலாசிரியர்களும் இங்கு உள்ளனர். பாடல்கள் தெரியும் ஆனால் இவர் தான் எழுதினார் என்று தெரியாது. இப்படி நிறைய திறமையான பாடலாசிரியர்கள் எந்தவித பாராட்டும் இன்றி தமிழ் சினிமாவில் தங்களுக்கான அங்கீகாரத்திற்காக மனம் தளராமல் ஓடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: CSK Vs GT: கூல் கேப்டனின் அதிரடி சாதனைகள்.. இவ்வளவா?